என்னிடம் ஆட்சியை கொடுத்தால் ஒரே இரவில் இதை செய்துகாட்டுவேன்.. மரண மாஸ் காட்டும் சீமான்..!

By vinoth kumarFirst Published Sep 18, 2021, 4:32 PM IST
Highlights

தமிழகத்தில் திமுக மட்டுமே சமூகநீதிக்காக குரல் கொடுப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவருகிறார்கள். திமுக செய்த சமூகநீதி என்ன? தமிழக மக்களுக்கு, சமூகநீதி பேசும் அவர்கள் என்ன செய்தார்கள். 

தன்னிடம் ஆட்சியை பொறுப்பை ஒப்படைத்து பாருங்கள் ஒரே இரவில் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கசாவடிகளையும் ஜேசிபி மூலம் தகர்த்து விடுவேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 

சமூக நீதிப் போராளி ரெட்டமலை சீனிவாசன் நினைவு நாளை முன்னிட்டு போரூரில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான்;- தமிழகத்தில் திமுக மட்டுமே சமூகநீதிக்காக குரல் கொடுப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவருகிறார்கள். திமுக செய்த சமூகநீதி என்ன? தமிழக மக்களுக்கு, சமூகநீதி பேசும் அவர்கள் என்ன செய்தார்கள். 

பெரியார் மட்டுமே சமூகநீதிக்காக குரல் கொடுத்ததைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். அவர் மட்டுமே போராடினார் என்பதை நான் மறுக்கிறேன். பல தலைவர்கள் சமூகநீதிக்காக தமிழகத்தில் போராடியிருக்கிறார்கள். அவர்களில் பெரியாரும் ஒருவர். ஆனால் அவர் மட்டுமே செயல்பட்டார் என்பதைப் போல ஆட்சியாளர்கள் காட்ட முயல்கிறார்கள். அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்றார். 

மேலும், ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் விலையைக் கொண்டு வராதது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் எரிபொருட்களை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைத்திருந்தால் அதை மத்திய அரசு முதலிலேயே செய்திருக்க வேண்டும். எரிபொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால் அது பெரு முதலாளிகளுக்குச் சாதகமாக இருக்காது. அதனால் அதைக் கொண்டு வர மாட்டார்கள். எரிபொருள் விலை என்பதை தட்டையாக பார்க்க முடியாது. அதுதான் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல சுங்கச்சாவடி கட்டணமும் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் தாக்கம் செலுத்துகிறது. இதனால்தான் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

சுங்கக் கட்டணம் வசூலித்தால், சாலைக்கென்று எதற்குத் தனி வரி வசூலிக்கிறார்கள். சாலைகள் போடப்பட்டால் அதற்கான செலவுக்கென ஒரு அறிக்கைத் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதைப் போலவே எத்தனை ஆண்டு காலம் சுங்கம் வசூலிக்கப்படும் என்பதையும் தெரிவிக்க வேண்டும். அதையும் கூட ஏன், தனியார் முதலாளிகள் ஏலம் எடுத்து வசூலிக்கிறார்கள்? நான் ஆட்சிக்கு வந்தால் ஒரே இரவில் அனைத்து சுங்கச்சாவடிகளையும் புல்டோசர் வைத்து தகர்த்து விடுவேன். என் மாநில சாலைகளை நான் பராமரித்துக் கொள்கிறேன் என்று சொல்வதற்கு இங்கு ஆள் இல்லை என சீமான் ஆவேசமாக பேசியுள்ளார்.

click me!