திமுக மனது வைத்தால் மன்மோகன் சிங் உடனே எம்.பி... காங்கிரஸ் பலத்தில் எம்.பி.யாக ஓராண்டுக்கு மேல் காத்திருக்க வேண்டும்!

By Asianet TamilFirst Published Jun 21, 2019, 7:39 AM IST
Highlights

ஒரிடத்தை ஏற்கனவே மதிமுகவுக்கு வழங்க திமுக உடன்பாடு கண்டுள்ளது. எனவே எஞ்சிய 2 இடங்களில் மட்டுமே திமுக போட்டியிட முடியும் என்ற நிலை உள்ளது. இந்த இரண்டு இடங்களிலிருந்துதான் ஓரிடத்தை மன்மோகன் சிங்குக்காக திமுகவிடம் காங்கிரஸ் தரப்பு கேட்டுவருவதாகக் கூறப்படுகிறது. 

கடந்த 28 ஆண்டுகளாக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்துவந்த முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் உடனே மீண்டும் உறுப்பினராக வேண்டும் என்றால் திமுக மனது வைத்தால்தான் முடியும்.
பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான அரசில் நிதி அமைச்சராக மன்மோகன் சிங் 1991- பொறுப்பேற்றது முதல் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்துவந்தார். 2019, ஜூன் 14-ம் தேதிவரை தொடர்ச்சியாக 5 முறை என 28 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். ஆனால், மேற்கொண்டு அவரால் அஸ்ஸாமிலிருந்து தேர்வு செய்ய முடியாத நிலைக்கு காங்கிரஸ் சென்றுவிட்டது. மன்மோகன் சிங் இடத்தோடு சேர்ந்து மாநிலங்களவைக்கு இரு இடங்கள் அஸ்ஸாமில் காலியாகின. இந்த இரு இடங்களையும் பாஜகவும் அதன் கூட்டணி கட்சியான அஸ்ஸாம் கன பரிஷத்தும் பங்கீட்டுக் கொண்டன.


மன்மோகன் சிங்குக்கு ஓரிடம் கிடைக்க காங்கிரஸுக்கு எம்.எல்.ஏ.க்கள் பலமும் இல்லை. அஸ்ஸாமில் ஓர் உறுப்பினரைத் தேர்வு செய்ய 43 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு அங்கே மொத்தமே 25 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இதன் காரணமாக மன்மோகன் சிங்கால் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து 6-வது முறையாகத் தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
வேறு மாநிலங்களிலிருந்து மாநிலங்களவைக்கு மன்மோகன் சிங் தேர்வு செய்யலாம்தான். ஆனால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் அடுத்த ஆண்டிலிருந்துதான் மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது தமிழகத்திலும் மக்களவை தேர்தலில் போட்டியிட்டதால் காலியான உறுப்பினர்களுக்கான இடங்கள் மட்டுமே தேர்தலை எதிர் நோக்கியுள்ளன. இந்த இடங்களுக்கு இந்த மாத இறுதியிலோ அல்லது ஜூலை முதல் வாரத்திலோ தேர்தல் அறிவிக்கபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 108 உறுப்பினர்கள் உள்ள நிலையில் 3 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்ய முடியும். இதில் ஒரிடத்தை ஏற்கனவே மதிமுகவுக்கு வழங்க திமுக உடன்பாடு கண்டுள்ளது. எனவே எஞ்சிய 2 இடங்களில் மட்டுமே திமுக போட்டியிட முடியும் என்ற நிலை உள்ளது. இந்த இரண்டு இடங்களிலிருந்துதான் ஓரிடத்தை மன்மோகன் சிங்குக்காக திமுகவிடம் காங்கிரஸ் தரப்பு கேட்டுவருவதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அதிகாரப்பூர்வமாக இரு கட்சிகளும் எதையும் அறிவிக்கவில்லை.

 
என்றாலும், கடந்த 28 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக மாநிலங்களவை உறுப்பினராக இருந்துவந்த மன்மோகன் சிங் மீண்டும் அந்தப் பதவியை உடனடியாகப் பெற வேண்டுமென்றால், திமுக மனது வைத்தால்தான் முடியும். மன் மோகன் சிங்குக்கு ஓரிடத்தை வழங்க திமுக முன்வந்தால், அடுத்த மாதம் 24-ம் தேதி முதல் மீண்டும் அவர் மாநிலங்களவை உறுப்பினராகிவிடலாம். ஒரு வேளை திமுக ஓரிடத்தை வழங்க முன்வராவிட்டால், மன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக ஓராண்டுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
தற்போது மக்களவையில் திமுகவுக்கு 23 எம்.பி.க்கள் உள்ள நிலையில் மாநிலங்களவையில் 3 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

click me!