திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்புதான் தலைதூக்கும்.. மக்களை பயமுறுத்தும் அமைச்சர் செல்லூர் ராஜூ..

By Ezhilarasan BabuFirst Published Mar 22, 2021, 10:53 AM IST
Highlights

நிலம் இல்லாதவர்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருவோம் என்று வாக்குறுதி அளித்த திமுகவினர் அதற்கு மாறாக 1,400 கோடி மதிப்பில் ஏழை மக்களின்  நிலங்களை அபகரித்தனர்.  

நிலம் இல்லாதவர்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருவோம் என்று வாக்குறுதி அளித்த திமுகவினர் அதற்கு மாறாக 1,400 கோடி மதிப்பில் ஏழை மக்களின்  நிலங்களை அபகரித்தனர். இதுதான் திமுக செய்த சாதனை, மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பு தலைதூக்கும் என அமைச்சர் செல்லூர் ராஜு எச்சரித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக அதிமுக திமுக ஆகிய இரண்டு கட்சியினரும் தேர்தல் அறிக்கை வெளியிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் ராஜு மதுரை பேரூராட்சியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

அப்போது பேசிய அவர் கடந்த பத்தாண்டுகளாக உங்களில் ஒருவனாக நீங்கள் அளித்த கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளேன், கொரோனா காலகட்டத்தில் தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் நாட்டு மக்கள் உயிர்தான் முக்கியம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 32 மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இந்தியாவிலேயே நோய் தடுப்பு நடவடிக்கைகளில் சிறந்த மாநிலம் தமிழகம்தான் என பிரதமர் மோடியே பாராட்டும் வகையில் செயல்பட்டார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு காணொலி காட்சி மூலம் தனது கட்சிக்காரர்களுடன் மட்டுமே ஆலோசனை செய்தார். கொரோனா காலத்தில் மக்களை சந்திக்கவே இல்லை, ஆனால் தற்போது ஓட்டுக்காக தெருத்தெருவாக அவர் மக்களை சந்திக்கிறார். ஆனால் அதிமுக அப்படி இல்லை, மக்களின் வாழ்வாதாரம் வாழ்க்கை தரம் உயர கடந்த 10 ஆண்டுகளாக பாடுபட்டது அம்மா அரசு. 

தேர்தல் அறிக்கைகளில் 100% நிறைவேற்றியுள்ளது. ஆனால் திமுக அப்படி அல்ல, ஸ்டாலின் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 100 தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் ஒன்றைக் கூட அவர் நிறைவேற்றவில்லை. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இரண்டு ஏக்கர் நிலம் தருவோம் என்று வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் நிலம் தரவில்லை மாறாக அப்பாவி மக்களிடம் இருந்து 1,400 கோடி மதிப்பில் நிலங்களை அதிகரித்தனர். அதுதான் திமுக செய்த சாதனை. ஆனால் அந்த நிலங்களை மீட்டு  மக்களிடம் ஒப்படைத்தவர் அம்மா. மீண்டும் திமுக ஆட்சி வந்தால் நில அபகரிப்பு தலைதூக்கும் என அவர் எச்சரித்தார். மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என ஸ்டாலின் கனவு காணுகிறார், அது ஒருபோதும் நடக்காது. ஏன் அவர் எதிர்க்கட்சித் தலைவராக கூட வரமுடியாது.  இவ்வாறு அவர் கூறினார். 

 

click me!