காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த மூன்று சட்டங்களும் தூக்கியெறியப்படும்..!! ராகுல் காந்தி பஞ்சாபில் சூளுரை..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 5, 2020, 4:15 PM IST
Highlights

பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு விவசாயியும் ஏன் இந்த  மசோதாவை எதிர்க்கிறார்கள். முகாமில் நடைபெற்ற பேரணியின்போது இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கான மோசடி சட்டங்கள் என்று ராகுல் காந்தி கூறினார், 

நாடு முழுவதும் வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பஞ்சாபில் நடைபெற உள்ள மூன்று நாள் பேரணியில் கலந்துகொள்ள பஞ்சாப்  வருகை தந்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் இக்கொடிய சட்டங்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்று  அரசுக்கு  கேள்வி எழுப்பியுள்ளார். விவசாயிகள் மத்தியில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும்போது இந்த மூன்று கருப்பு சட்டங்களையும் ஒழித்து குப்பைத்தொட்டியில் வீசுவோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். 

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபில் நடைபெற உள்ள மூன்று நாள் டிராக்டர் பேரணியில் கலந்து கொள்ள ராகுல் காந்தி, பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால், நவ்ஜோத் சிங் சித்து ஆகியோரும் அங்கு முகாமிட்டுள்ளனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக ராகுல் காந்தி பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். ஒரு சட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்றால் அதை முதலில் மாநிலங்களவை மற்றும் மக்களவையில் நீங்கள் விவாதித்திருக்க வேண்டும். இந்த மசோதா விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறுகிறார், அப்படியெனில் அதை ஏன் சபையில் பகிரங்கமாக விவாதிக்கவில்லை. இந்தச் சட்டங்களால் ஒருவேளை விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களை ஏன் நாடுமுழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.? 

பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு விவசாயியும் ஏன் இந்த  மசோதாவை எதிர்க்கிறார்கள். முகாமில் நடைபெற்ற பேரணியின்போது இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கான மோசடி சட்டங்கள் என்று ராகுல் காந்தி கூறினார், சட்டங்களின் மூலம் 23 பில்லியன் விவசாயிகளின் நிலம் மற்றும் பயிர்கள் குறி வைக்கப்படுகின்றன. தற்போதைய அமைப்பில் சில குறைபாடுகள் உள்ளன ஆனால் அவற்றை மாற்ற வேண்டுமே தவிர அதை முற்றிலுமாக அழிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அதை முற்றிலுமாக அழிக்க விரும்புகிறார் என்றார். இதற்கிடையில் உத்தர பிரதேசம் ஹத்ராஸ் சம்பவத்தை குறிப்பிட்ட ராகுல்காந்தி, உத்திரப்பிரதேசத்தில் ஒரு சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கிறாள். சிறுமியை கொலை செய்தவர்கள் மீது அந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் மகளை பறிகொடுத்த அந்த குடும்பம் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாவட்ட ஆட்சியர் அம்மக்களை அச்சுறுத்துகின்றனர். இந்தியாவின் நிலைமை இதுதான். பாதிக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதே தவிர குற்றவாளிகளுக்கு எதுவும் நடக்காது என்றார் ராகுல் காந்தி. 

அப்போது பேசிய நவ்ஜோத் சிங் சித்து, விவசாயிகள் நாட்டின் முதுகெலும்புகள், விவசாயிகள் மீது எடுக்கும் எந்த அநீதியையும் பொறுத்துக்கொள்ள முடியாது. இச்சட்டம் லட்சக்கணக்கான விவசாயிகளை அழிக்கக்கூடும், பஞ்சாப் அரசு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை இறக்குமதி செய்கிறது. அப்படி இருக்க ஏன் விவசாயிகளை வளர்க்க முடியாது. தயவு செய்து விவசாயிகளை காப்பாற்றுங்கள், பண்ணைகளை காப்பாற்றுங்கள், விவசாய சட்டங்களால் பஞ்சாப் அரசியல் களம் வெப்பமடைந்துள்ளது. இந்த விவசாய சட்டத்தை எதிர்த்து 31 விவசாய சங்கங்கள் வீதிகளில் இறங்கியுள்ளன. அதே நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கி உள்ளன. ஹர்சிம்ரத் கௌரும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மொத்தத்தில் இந்த சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் மக்கள் கிளந்தெழுந்துள்ளனர் என சித்து தெரிவித்துள்ளார்.  
 

click me!