
மதுரையில் சில நிகழ்வுகளில் கலந்து கொள்ள போன முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டமே சேரவில்லை என்கிற விவகாரம்தான் தற்போது இரு அணி அ.தி.மு.க.விலும் செம சூடான டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.
நலத்திட்ட உதவி வாங்க வந்தவர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் சிறு கும்பலை தவிர பெரிதாக கூட்டம் சேரவேயில்லை. நாற்காலிகளெல்லாம் வரிசை வரிசையாக காலியாக கிடந்திருக்கின்றன. இதில் எடப்பாடி செம காட்டம் ப்ளஸ் அப்செட்டாம்.
இப்படி கூட்டம் கூடாத காரணத்தினால் ’பொதுமக்கள் எடப்பாடியை புறக்கணிக்கிறார்கள்’...என்றெல்லாம் சீன் போட தேவையில்லை. காரணம் எந்த அரசியல் கூட்டத்துக்கு பொதுமக்கள் சாரை சாரையாக கிளம்பி வருகிறார்கள்? ஆளும் கட்சி, ஆண்ட கட்சி, ஆட்சி கனவிலிருக்கும் கட்சி என்று எல்லா கட்சிகளும் தங்களின் நிகழ்வுகளுக்கு பணம், உணவு இத்யாதிகளை கொடுத்துத்தான் ஆட்களை கூட்டி வருகிறார்கள். முதல்வர் எடப்பாடியின் நிகழ்வொன்றும் இதற்கு விதிவிலக்கில்லை.
அப்படியானால் மதுரை மாவட்ட அ.தி.மு.க. முதல்வர் நிகழ்வுக்கு கூட்டம் கூட்டுவதில் அலட்சியம் காட்டிவிட்டது என்பதுதானே இதில் மறைந்திருக்கும் பொருள்! ஆக அ.தி.மு.க.வில் எடப்பாடி அணியிலிருக்கும் முக்கியஸ்தர்களே அவரை மதிப்பதில்லை, அவருக்காக உழைப்பதில்லை என்று இதற்கு விளக்கம் கொடுத்துவிடலாமா?
மிலிட்டரி கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டாலும் கூட ஜெ., காலத்தில் இருந்தே அ.தி.மு.க. சாதி ரீதியாக பிரிந்துதான் இருந்தது. தென் தமிழகத்தில் உள்ள ஆதிக்க சாதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு, மேற்கில் உள்ள ஆதிக்க சாதி நிர்வாகிகளை பிடிக்காது.
நம்ம சாதியில் எத்தனை பேர் அமைச்சர், அந்த சாதியில எத்தனை பேர் அமைச்சர் என்று தலையை எண்ணி தங்களுக்குள் தகராறு செய்வதை ஜெ.,வுக்கு தெரியாத ஒரு வழக்கமாகவே வைத்திருந்தனர்.
தெற்கு நபர்களுக்கு சமுதாய ரீதியாக சசிகலா டீமின் சப்போர்ட் வேறு எப்போதுமே இருந்ததால் கொங்கு நிர்வாகிகளுக்கு எதிராக கொம்பை சிலிர்த்துக் கொள்வதே தெற்கின் வேலை.
ஜெ., இருக்கும் போதே இந்த நிலை என்றால், இப்போதிருக்கும் சூழலில் மதிப்பார்களா? தெற்கில் இத்தனை எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் இருக்கும்போது அவசரத்துக்காக உட்காரவைக்கப்பட்ட கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவர் தமிழக முதல்வராக இன்னும் தொடர்வதை அவர்கள் விரும்பவில்லை என்பதையே இது காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
இதன் வெளிப்பாடே கூட்டம் கூட்டுவதில் காட்டும் அலட்சியம் என்றும், இதன் மூலம் மீடியா மற்றும் பொதுமக்கள் மத்தியில் எடப்பாடிக்கு பெரிய ஆதரவு நிலை இல்லை எனும் தோற்றத்தை உருவாக்க தெற்கு லாபி நினைக்கிறது என்றும் விளக்குகிறார்கள் விமர்சகர்கள்.
மேற்குக்கு எதிராக தெற்கு முஸ்டி முறுக்கும் விவகாரம் எங்கு போய் முடியும்? பார்ப்போம்!