
ஆன்மிக அரசியலை வைத்து திராவிட அரசியலை அழிக்கலாம் என்று நினைப்பவர்கள் படு தோல்வி அடைவார்கள் என்றும் என்ன பிளான் பண்ணினாலும் அது தமிழகத்தில் நடக்கவே நடக்காது என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கடந்த 31 ஆம் தேதியன்று புதிதாக கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியை நேற்று இரவு சந்தித்தார்.
கோபாலபுரம் வந்த ரஜினிகாந்த்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்று கருணாநிதியின் அறைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் கருணாநிதியை சுமார் 20 நிமிடங்கள் சந்தித்த ரஜினி, செய்தியாளர்களிடம் பேசும்போது, திமுக தலைவரின் உடல்நிலை குறித்து விசாரித்தாகவும், அவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தாகவும் கூறினார். மேலும் , அரசியல் பிரவேசத்திற்காக கருணாநிதியிடம் ஆசி பெற்றதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரிக்க வேண்டும் என்று என்னோடு தொடர்பு கொண்டு அதற்கான நேர அனுமதியைக் கேட்டார். ஏற்கெனவே நான்கைந்து மாதத்திற்கு முன்னால் அவர் கருணாநிதியை சந்தித்துள்ளார் என கூறினார்.
ஆகவே இந்த சந்திப்பில் ஆச்சரியம் இல்லை. புதிய ஒரு செய்தி அல்ல. அவர் கருணாநிதியையும், எனது தாயார் தயாளு அம்மாளையும் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அவர் கருணாநிதியை சந்தித்து , அரசியல் பிரவேசத்திற்கு ஆசி பெற்றதாக தெரிவித்துள்ளார்.
அரசியல் பண்பாட்டு அடிப்படையில் கருணாநிதி அவரை வாழ்த்தி இருக்கலாம். அவர் மட்டுமல்ல விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போதும் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார் என்று ஸ்டாலின் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் ஆசி மட்டும் கேட்டாரா? திமுகவின் ஆதரவையும் கேட்டாரா? என்று செய்தியாளர்கள் ஸ்டாலினிடம் அப்போது கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த ஸ்டாலின், ரஜினி ஆதரவை கேட்கிறாரா? கேட்கவில்லையா? அதை ஏற்றுக்கொள்வதா? மறுப்பதா? என்பது தேர்தல் நேரத்தில் யோசிக்க வேண்டிய விஷயம் என்று தெரிவித்தார்..
ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலைத்தான் நடத்தப் போகிறேன் என்று தெளிவாக சொல்லி இருக்கிறார். ஏதோ தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திராவிட இயக்கத்தையே அழித்துவிடலாம் என்று ஒரு சிலர் திட்டமிட்டு பலருடைய தூண்டுதலால் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி இருப்பதாக ஒரு சித்திரத்தை, உருவகத்தை சிலர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஸ்டாலின் பகீர் குற்றச்சாட்டை சுமத்தினார்.
இந்த மண் திராவிட இயக்க மண், தமிழ்நாட்டின் மண். பெரியார், அண்ணா, கருணாநிதியால் பண்பட்டிருக்கக் கூடிய மண் அப்படிப்பட்ட திராவிட இயக்கத்தை அழிப்பதற்கு யார் யார் எல்லாம் முயற்சித்துள்ளார்கள் அவர்கள் தோற்ற கதைகள் நாட்டிற்கு நன்றாக தெரியும் என்றார்.
அப்படி ஆன்மீக அரசியலைக் கொண்டு திராவிட அரசியலை அழிக்க நினைத்தால் அவங்க தோற்றுப் போவார்கள் என ஸ்டாலின் தெரிவித்தார்.