சிலை கடத்தல் வழக்கு: கடவுளை நேரில் ஆஜர் படுத்த உத்தரவிட்ட சிறப்பு நீதி மன்றத்திற்கு உயர் நீதி மன்றம் கண்டனம்.

By Ezhilarasan BabuFirst Published Jan 7, 2022, 6:12 PM IST
Highlights

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் அந்த சிலையை மீட்டு கும்பகோணம் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அந்த சிலை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது அது மூலஸ்தானத்தில் நிறுவப்பட்டுள்ளது. 

சிலை கடத்தல் வழக்கில் சிலையை ஆய்வு செய்வதற்காக மக்கள் கடவுளாக வழிபடும் சிலையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்ட கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சிலையை ஆய்வு செய்ய வேண்டுமெனில் நிதிமன்றம் வழக்கறிஞர் ஆணையரை நியமித்து ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் புராதன கோவில்களில் இருந்து ஆயிரக்கணக்கான சிலைகள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளது. சமீபகாலமாக அதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அமைக்கப்பட்டு சிலைகள் கடத்தப்படுவது தடுக்கப்பட்டு வருவதுடன், கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு வரும் பணிகளும் நடந்து வருகிறது. அந்தவகையில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து கடும் சட்ட போராட்டத்திற்கு பின்னர் நூற்றுக்கணக்கான சிலைகள் தமிழகத்திற்கு மீட்டு வரப்பட்டுள்ளது. இந்த வகையில் திருப்பூர் மாவட்டம் சிவிரிபாளையத்தில் உள்ள பரமசிவன் சிவன் கோவிலில் இருந்த மூலவர் சிலை பல வருடங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு இருந்தது.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் அந்த சிலையை மீட்டு கும்பகோணம் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அந்த சிலை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது அது மூலஸ்தானத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில் அது தொடர்பான வழக்கு விசாரணையின்போது சிலையை ஆய்வு செய்வதற்காக நேரடியாக அந்த சிலையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து சிலையை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல கோயில் செயல் அலுவலர் நடவடிக்கை எடுத்தார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவிரிபாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தது. சிலையை கடவுளாக மக்கள் நம்பும் நிலையில் நீதிமன்றம் கடவுளை சமன் செய்ய முடியாது என்று கூறிய அவர், சிலையை நேரில் ஆஜர்படுத்தும் படி உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் சிலையை ஆய்வு செய்ய வேண்டுமானால் வழக்கறிஞர், ஆணையரை நியமித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் சிலையை ஒருபோதும் இருக்கும் இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டியது இல்லை என்றும் அதிரடியாக உத்தரவிட்டார். அது தொடர்பான விசாரணை 4 வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

click me!