கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சப் பணம் வாங்கியபோது ஐசிஎப் அதிகாரி கையும் களவுமாக கைது.. சிபிஐ அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Jul 6, 2021, 12:38 PM IST
Highlights

 இந்த மொத்த லஞ்சப் பணத்தையும் பணியில் இருந்தபோது வாங்கினால் சந்தேகம் ஏற்படும் என்ற காரணத்தினால், லஞ்சம் கொடுத்த தனியார் நிறுவன பெண் இயக்குனர் இடமே சேமித்து வைத்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. 

பணியின்போது பெற்ற கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சப் பணத்தை ஓய்வு பெற்ற பின் தவணை முறையில் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கிய ஐசிஎப்  முன்னாள் தலைமை மெக்கானிக்கல் பொறியாளரை சிபிஐ கைது செய்துள்ளது. சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் முதன்மை மெக்கானிக்கல் பொறியாளராக பணியாற்றி வந்தவர் காத்பால். இவர் தனது பதவியில் இருந்து கடந்த மார்ச் 31 ஆம் தேதி ஓய்வு பெற்றார். இவர் பதவியில் இருந்த காலகட்டத்தில் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தைச் சார்ந்தவர்களுக்காக தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து தனது அதிகாரத்திற்கு உட்பட்ட ஐ.சி.எஃப் தொழிற்சாலைக்கான டெண்டர்களை கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அவர் பதவி ஓய்வு பெறும் வரை சுமார் 5.89 கோடி லஞ்சம் வாங்கிக் கொண்டது தெரியவந்துள்ளது.  

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் காத்பால் மீதும் இவ்வழக்கில் தொடர்புடைய தனியார் நிறுவனத்தைச் சார்ந்த இயக்குநர் உட்பட மேலும் 4 பேர் மீதும் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த மொத்த லஞ்சப் பணத்தையும் பணியில் இருந்தபோது வாங்கினால் சந்தேகம் ஏற்படும் என்ற காரணத்தினால், லஞ்சம் கொடுத்த தனியார் நிறுவன பெண் இயக்குனர் இடமே சேமித்து வைத்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஓய்வு பெற்றபின் இந்த மொத்த லஞ்சத்தின் முதல் தவணையாக 50 லட்சம் ரூபாயை சென்னையைச் சார்ந்த தனியார் நிறுவன இயக்குநரின் டெல்லியில் இருக்கும் பங்குதாரர் மூலம் அங்குள்ள காத்பாலின் சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டதும் சி.பி.ஐ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. தவணையாக  லஞ்சப் பணத்தை 4 நபர்களிடம் இருந்து பெற்றபோது சி.பி.ஐ அதிகாரிகள் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். 

மேலும், தனியார் நிறுவன இயக்குநர் உட்பட 4 பேரையும் சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும், டெல்லி மற்றும் சென்னையில் உள்ள காத்பாலுக்குச் சொந்தமான 9 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சுமார் 2.75 கோடி ரொக்கம், சுமார் 23 கிலோ தங்கம் உள்ளிட்டவற்றையும் சி.பி.ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். "வந்தே பாரத்" திட்டத்தின் கீழ் சொந்த நாட்டிலேயே ரயில் தயாரிக்கும் திட்டத்தை ரயில்'18 என்ற பெயரில் வடிவமைக்கும் பொறுப்பு சென்னை ஐ.சி எஃப்-க்கு வழங்கப்பட்டு ரயில்வே வாரியத்தால் திட்டம் தொடர்பான வரைபடங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் சென்னை ஐ.சி.எஃப்-யிடம் இருந்து கோரப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அதன் முதன்மை பொறியாளராக இருந்த சுப்ர ஹன்சு முறையாக ஒத்துழைப்பு அளித்து ரயில்வே வாரியம் கேட்ட ஆவணங்களை வழங்காததால் அவரை பணியிடமாற்றம் செய்து  காத்பாலை ரயில்வே வாரியம் சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப்-ன் முதன்மை பொறியாளராக பணியமர்த்தியது. 

ஐ.சி.எப்-ன் முதன்மை தலைமை பொறியாளர் ஆக கடந்த பிப்ரவரி மாதம் 2019 ஆம் ஆண்டிலிருந்து , இந்த ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெற்ற காலம் வரை ஐசிஎப் மெக்கானிக்கல் பிரிவில் காத்பால் தொடர்புடைய ஒப்பந்தங்கள் வரவு செலவுகள் உள்ளிட்டவை தொடர்பாக சிபிஐ விரிவான விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

 

click me!