
தற்போது நடைபெற்ற பொதுக்கூட்டம், அதிமுக புரட்சி தலைவி அணியின் கூட்டமாக இருந்திருக்கலாம் என்றும் அதிமுக அம்மா அணி என்றால் அது நாங்கள்தான் என்றும் நாங்கள் விரைவில் பொதுக்குழு கூட்ட உள்ளதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், கர்நாடக மாநிலம் குடகில் சொகுசு விடுதியில் தங்கியுள்ள தனது ஆதரவர்களைச் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர், டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய தினகரன், இரட்டை இலையை முடக்கிய ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
சசிகலாவே பொது செயலாளர் என தேர்தல் ஆணையத்தில் ஆவணம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார். சசிகலா நியமனத்தை தேர்தல் ஆணையம் ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ளது. சசிகலாவை பொது செயலாளர் பதவி ஏற்றுக் கொள்ளச் சொன்னதே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிதான் என்றார்.
சதி என்பதையும் தாண்டி எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு துரோகமிழைத்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி கலைக்கப்பட வேண்டும். மீண்டும் தேர்தல் நடைபெற்றால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் மோக வெற்றி பெறுவார்கள் என்று கூறினார்.
குடகு, சொகுசு விடுதியில் தங்கியியுள்ள எனது ஆதரவாளர்கள் அதிமுக எனும் கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராளிகளாக இருக்கக்கூடிய எனது அணியினருக்கு பதவி முக்கியமில்லை.
தற்போது நடைபெற்ற பொதுக்கூட்டம், அதிமுக புரட்சி தலைவி அணியின் கூட்டமாக இருந்திருக்கலாம்.
அதிமுக அம்மா அணி என்றால் அது நாங்கள்தான். நாங்கள் விரைவில் பொதுக்குழு கூட்ட உள்ளோம்.
பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக திண்டுக்கல் சீனிவாசன் மாற்றி மாற்றி பேசி வருகிறார் என்று டிடிவி குற்றம் சாட்டியுள்ளார்.
பதவிக்காக சொந்த மனைவி, பிள்ளைகளைக் கூட தன்னுடையது இல்லை என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறுவார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை பார்க்க சசிகலாவுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பேசும்போது தரம் தாழ்ந்து பேசுகிறார். அவருக்கு பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை. சுயநலத்துக்குகாகவே அமைச்சர்கள் தற்போது எனக்கு எதிராக பேசி வருகின்றனர் என்று டிடிவி தினகரன் கூறினார்.