எத்தனை சோதனைகள் வந்தாலும் முறியடிப்பேன்.. எகிறி அடிக்கும் சசிகலா.. சைலண்டான எடப்பாடி..??

By Ezhilarasan BabuFirst Published Mar 7, 2022, 12:14 PM IST
Highlights

சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கான முழக்கம் அடுத்தடுத்து தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த விவகாரத்தில் இதுவரை எடப்பாடி பழனிச்சாமி கருத்து கூறாமல் சைலாண்டாக இருந்து வருவது அவரது ஆதரவாள்ர்களை குழப்பமடைய வைத்துள்ளது. இதில் எடப்பாடியின் நிலைபாடு என்ன என்பது அவர் செய்தியாளர்களை சந்தித்த பிறகே தெரியவரும். 

கழகத் தொண்டர்கள் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், முழக்கங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என சசிகலா உறுதி கூறியுள்ளார். எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் முறியடிப்பேன் என்றும் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

கடந்த சில தினங்களாக சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற முழக்கம் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதி காத்துவந்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்தே இந்த முழக்கம் எழுந்துள்ளது. ஓபிஎஸ்சின் ஆதரவாளர்கள் அதிமுகவில் சசிகலாவை சேர்க்க தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக ஓபிஎஸ்சின் பண்ணை வீட்டில் கூடிய அவரது ஆதரவாளர்கள் மீண்டும் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சிறிது நேரத்தில் ஆர்.பி உதயகுமார் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்துப் பேசினார். இதேநேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகளிடம் ரகசிய ஆலோசனை நடத்தினார். இந்த விவகாரம் அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கி வரும் நிலையில் அதற்கு தடை போட வேண்டும் என்பதற்காக ஓபிஎஸ் சசிகலாவை கட்சிக்குள் கொண்டுவர வேண்டுமென முயற்சிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.

 

இந்நிலையில் தான் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.பி ராஜா சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். மொத்தமாக ஓபிஎஸ் சசிகலா பக்கம் சாய்ந்து விட்டார் என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சசிகலா மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டால் கட்சியில் உயர் பதிவியில் உள்ள தாங்கள் மீண்டும் அவரிடம் போய் நிற்க வேண்டிய சூழல் ஏற்படுமே என எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் நினைப்பதாக தெரிகிறது. 

ஆனால் ஓபிஎஸ் எடப்பாடியிடம் நம்பர் 2ஆக இருப்பதை விட சசிகலாவிடம் நெம்பர் 2வாக இருந்துவிடலாம் என முடிவு செய்துவிட்டார் என கூறப்படுகிறது.  இதனால் ஓபிஎஸ் தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஓபிஎஸ்- இபிஎஸ்  தலைமையின் கீழ் நடைபெற்ற நான்கு தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்து விட்டது. தங்களால் கட்சியை வழிநடத்த முடியவில்லை என்பதை ஓபிஎஸ் இபிஎஸ் உணர்ந்து விட்டனர்.

அதனால்தான் ஓ பன்னீர்செல்வம் கட்சியை வழிநடத்த வலுவான தலைமை சசிகலா தான் என்பதை உணர்ந்து விட்டார்,  எனவேதான் சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தீர்மானம் நிறைவேற்றுகின்றனர் என சசிகலா தரப்பினர் கூறி வருகின்றனர். சிறையில் இருந்து வந்தவுடன் கட்சியை அதிரடியாக கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் சசிகலாவின் நடவடிக்கைகள் மென்மையாகவே இருந்துவருகிறது. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், அனைத்து பிரச்சனைகளும் விரைவில் சீராகும், தொண்டர்களை விரைவில் சந்திக்க போகிறேன் என அவர் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளையே பேசி வருகிறார். இந்நிலையில் பன்னீர்செல்வத்தின் இந்த முயற்சி  சசிகலா தரப்பிற்கு புது தெம்பை கொடுத்துள்ளது.

இந்நிலையில்தான் கழகத் தொண்டர்களின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், முழக்கங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தென்மாவட்டங்களில் சுற்றுப் பயணம் முடித்து வந்துள்ளார், அது தொடர்பாக தனது  மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தென் மாவட்டங்களுக்கு சென்று வந்த பயணம் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இது ஆன்மிக பயணமாக இருந்தாலும் தென்மாவட்ட மக்கள் என்னை அன்போடு அரவணைத்து மிகப்பெரிய வரவேற்பு அளித்தனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய தென் மாவட்டங்களில் சென்ற அனைத்து இடங்களிலும் கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் வழி நெடுகிலும் நின்று அளித்த வரவேற்பில் மனம் நெகிழ்ந்து போனேன்.

எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரை ஒவ்வொரு கழகத் தொண்டர்களின் கண்களிலும் காணமுடிந்தது. முதியவர்கள், இளம் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து நம் இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்ற முழக்கத்தை எழுப்புகிறீர்கள். நீங்கள் அனைவரும் என்மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கை வீண் போகாத வகையில் என் எஞ்சியுள்ள வாழ்நாட்களை உங்களுக்காக அர்ப்பணிப்பேன். எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் முறியடித்து கழகத் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக உறுதியோடு இருந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி வழியில் கழகத்தை காப்போம். கவலைப்பட வேண்டாம். உங்களுடைய எதிர்பார்ப்புகளையும், ஏக்கங்களையும் அறிந்துகொள்ள இந்த பயணம் உதவியாக இருந்தது. அது விரைவில் நிறைவேறும் என அவர் கூறியுள்ளார்.

 

சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கான முழக்கம் அடுத்தடுத்து தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த விவகாரத்தில் இதுவரை எடப்பாடி பழனிச்சாமி கருத்து கூறாமல் சைலாண்டாக  இருந்து வருவது அவரது ஆதரவாள்ர்களை குழப்பமடைய வைத்துள்ளது. இதில் எடப்பாடியிஃ நிலைபாடு என்ன என்பது அவர் செய்தியாளர்களை சந்தித்த பிறகே தெரியவரும்.

 

 

click me!