இருக்கிற இடம் தெரியாமல் அழித்துவிடுவேன்; நிர்வாகிகள் மத்தியில் பேசிய ஸ்டாலின்!

By vinoth kumarFirst Published Aug 14, 2018, 12:23 PM IST
Highlights

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க தோல்விக்கு காரணமாக இருந்த விஜயகாந்தை சட்டப்பேரவை தேர்தலுடன் ஒழித்துகட்டியது  போல் அழகிரியையும் அரசியல் அரங்கில் இருந்து ஒழித்துக்கட்டாமல் விடமாட்டேன் என்று ஸ்டாலின் ஆவேசமாக பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க தோல்விக்கு காரணமாக இருந்த விஜயகாந்தை சட்டப்பேரவை தேர்தலுடன் ஒழித்துகட்டியது  போல் அழகிரியையும் அரசியல் அரங்கில் இருந்து ஒழித்துக்கட்டாமல் விடமாட்டேன் என்று ஸ்டாலின் ஆவேசமாக பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கலைஞர் மறைவைத் தொடர்ந்து சென்னையில் உள்ள கோபாலபுரம் இல்லத்தில் ஸ்டாலின், கனிமொழி, செல்வி உள்ளிட்டோர் குடும்ப உறுப்பினர்களை அரவணைத்து கட்சியை வழிநடத்திச் செல்வது குறித்து தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். அழகிரி மட்டும் ஆலோசனையில் பங்கேற்காமல் தனது தேவைகள் என்னென்ன என்பதை செல்வியிடம் கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு வலியுறுத்தி வந்தார்.

செல்வியும் கூட அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு கட்சியில் நல்ல பதவியும், திருப்பரங்குன்றம் தொகுதியில் சீட்டும் கொடுத்தால் போதும் அழகிரி பிரச்சனை செய்யப்போவதில்லை என்று ஸ்டாலினிடம் லாபி செய்து வந்தார். ஆனால் ஸ்டாலினை பொறுத்தவரை அழகிரி மற்றும் அவரை சார்ந்தவர்களை ஒரு போதும் கட்சிக்குள் மீண்டும் அனுமதிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். ஸ்டாலினின் இந்த நிலைப்பாட்டுக்கு தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் மட்டும் அல்லாமல் துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் ஒட்டு மொத்தமாக ஆதரவு தெரிவித்து வந்தனர். 

இதனால் அழகிரிக்கோ அவரது மகனுக்கோ பதவி கொடுக்கும் எண்ணத்தில் தான் இல்லை என்பதை ஸ்டாலின் செல்வியிடம் நேரடியாகவே கூறியுள்ளார். இந்த தகவல் அறிந்தே கலைஞர் நினைவிடத்திற்கு சென்று அழகிரி கலகத்தை ஆரம்பித்துள்ளார். மேலும் டைம்ஸ் நவ் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது கூட, தான் தி.மு.கவிற்கு வருவதை ஸ்டாலின் விரும்பவில்லை என்றே அழகிரி கூறியிருந்தார். மேலும் தி.மு.கவில் காசுக்காக கட்சிப் பதவிகள் விற்பனை செய்யப்படுவதாக அழகிரி பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். 

இந்த குற்றச்சாட்டு தான் ஸ்டாலினை பயங்கரமாக ஆத்திரம் அடைய வைத்துள்ளது. அழகிரி பேட்டியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த ஸ்டாலின், என்னை அப்பாவைப் போல் அழகிரி நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் நான் அப்படி இல்லை. அரசியலில் என் வழி கலைஞர் வழி இல்லை என்று அருகாமையில் இருந்த தி.மு.க நிர்வாகிகளிடம் ஸ்டாலின் கூறியதாக சொல்லப்படுகிறது. கேட்கும் தொகுதிகளை கொடுத்து நான் கூட்டணிக்கு வந்துவிடுவேன் என்று விஜயகாந்த் கணக்கு போட்டார். ஆனால் அவரது கணக்கை பொய் கணக்காக்கியதுடன் கடந்த சட்டமன்ற தேர்தலுடன் விஜயகாந்தை ஒழித்துகட்டிவிட்டேன். தற்போது விஜயகாந்த் கட்சி இருக்கும் இடமே தெரியவில்லை.  இதே போன்ற நிலைமை தான் அழகிரிக்கும் ஏற்படும். கட்சி முழுக்க முழுக்க நம் கட்டுப்பாட்டில் உள்ளது என்று ஆவேசமாக ஸ்டாலின் பேசியதாக கூறப்படுகிறது.

click me!