‘தொப்பி’யில் போட்டியிடுவேன்...  ‘தில்’லாகச் சொல்லும் ‘கூல்’ தினகரன்..!

First Published Nov 24, 2017, 4:25 PM IST
Highlights
i will contest rk nagar bi election in cap symbol says ttv dinakaran


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் மீண்டும் தொப்பி சின்னத்திலேயே போட்டியிடுவேன் என்று உறுதிபடத் தெரிவித்தார் டிடிவி தினகரன். 

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் பேசிய தினகரன், 122 எம்எல்ஏ.,க்கள் எங்கள் பக்கம் இருந்த போது,  எங்களுக்கு இரட்டை இலைச் சின்னத்தைத் தரவில்லை, ஆனால் இப்போது கொடுத்திருக்கிறார்கள். எனவே இதில் சதி இருக்கிறது என்று கூறினார். 

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் தொப்பி சின்னத்தில் போட்டியிட உள்ளேன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். எனவே அவர் சுயேட்சையாகவே போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. 

அதிமுக சின்னத்தை மீட்க இரட்டை இலையை எதிர்த்துப் போட்டியிடவேண்டிய சூழல் உருவாகி உள்ளது; உச்ச நீதிமன்றம் சென்று சட்டப்படி இரட்டை இலையை மீட்போம் என்று கூறிய தினகரன்,  கட்சியைக் காப்பாற்றும் கடமை எனக்கு இருக்கிறது; ஆட்சியாளர்களுக்கு கட்சி குறித்து கவலையில்லை என்றார்.

சசிகலா, கட்சியின் பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது சர்ச்சையில் இருகிறது. இந்நிலையில்,  சசிகலா தலைமையில் கட்சி இயங்கினால் தான் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியும் என்று மீண்டும் உறுதியாகக் கூறினார் தினகரன். 

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதையே மீண்டும் வலியுறுத்திச் சொன்ன தினகரன், இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்திருக்கிறது என்றார். மேலும்,  தேர்தல் ஆணைய தீர்ப்பு வந்ததும், இடைத்தேர்தல் அறிவித்ததில் இருந்தே இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் சதி நடந்துள்ளது தெரிகிறது என்றார்.  

எனவே, இடைத் தேர்தலின்போது இரட்டை இலைச்  சின்னத்தை அவர்களிடம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?  என்று கேள்வி எழுப்பிய தினகரன்,  பாஜக., வின் சதிக்கு முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் உடந்தை யாக இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார். 

ஜெயலலிதாவின் வாக்கு வங்கி எங்களுக்கே உள்ளது என்றும்,  முதல் சுற்றில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தாலும், இறுதிச் சுற்றில் நமக்கே வெற்றி என்று பேசினார் தினகரன். 

முன்னதாக, தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறினர். இந்நிலையில் தினகரனே  தான் போட்டியிடுவதை உறுதிப் படுத்தி பேசியுள்ளார். மேலும், அவர் தனிக்கட்சி தொடங்கக் கூடும் என்று செய்திகள் உலா வந்தன. ஆனால், அவர் சுயேட்சையாக தொப்பி சின்னத்தில் போட்டியிட்டு எதிர்காலத்தில் அதிமுக., கட்சியைக் கைப்பற்றும் அல்லது கபளீகரம் செய்யும் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

click me!