
வீடியோவில் பேசிய சரவணன் எந்த சூழ்நிலையில் பேசினார் என்பது குறித்து ஒ.பி.எஸ் தான் பதிலளிக்க வேண்டும் எனவும், கூவத்தூர் பணபட்டுவாடா குறித்து திமுக வழக்கு தொடர்வதாக இருந்தால் அதை தான் வரவேற்பதாகவும் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக இரண்டாக பிளவுற்ற போது சசிகலா தரப்புக்கும் ஒ.பி.எஸ் தரப்புக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. பிரிந்து சென்ற ஒ.பி.எஸ்க்கு எதிராக சரசிகலா தரப்பு அமைச்சரவை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால் எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் தனக்கு ஆதரவு அளிப்பார்கள் என பன்னீர்செல்வம் பேட்டி அளித்து வந்தார். இதனால் முதலமைச்சராக வேண்டும் என காத்திருந்த சசிகலாவுக்கு வயிற்றில் புளியை கரைத்தது.
இதனால் எம்.எல்.ஏக்கள் அனைவரையும் அவசரம் அவசரமாக சென்னைக்கு அழைத்து மீட்டிங் போட்டார் சசிகலா. அப்போது ஆட்சியை காப்பாற்ற வேண்டும், கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பது குறித்து பேசிய வீடியோ மட்டும் செய்தியாளர்களுக்கு கிடைத்தது.
ஆனால் தனிப்பட்ட முறையில் என்ன பேசப்பட்டது என்பது குறித்த எவ்வித தகவலும் மீடியாக்களுக்கு கிட்டவில்லை. இதையடுத்து அனைத்து எம்.எல்.ஏக்களும் பேருந்தில் கூவத்தூர் ரிசார்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தொடர்ந்து கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்டெடுக்குமாரும் பன்னீர்செல்வம் அணி மற்றும் எதிர்கட்சியினர் குரல் கொடுத்தனர்.
அங்கிருந்து சில எம்.எல்.ஏக்கள் தப்பித்து வந்து ஒ.பி.எஸ்சிடம் தஞ்சம் அடைந்தனர்.
இதில் முதல் ஆளாக வெளியே வந்தவர் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன். ஆனால் இவர் பேசிய வீடியோ ஒன்றை ஆங்கில சேனல் ஒளிபரப்பி உள்ளது.
அதில், ஜெயலலிதா மரணத்தை வைத்து அரசியல் செய்வதாகவும், எம்.எல்.ஏக்களுக்கு பேரம் பேசப்பட்டதாகவும், இருதரப்பிலும் பணப்பட்டுவாடா நடைபெற்றதாகவும் சரவணன் பேசியிருந்தார்.
இதுகுறித்த வீடியோவில் இருப்பது தான் தான் என்றும், ஆனால் குரல் என்னுடையது அல்ல என்றும் சரவணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டிடிவி தினகரனை சந்தித்து விட்டு வந்த கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஓபிஎஸ் தரப்பில் சரவணன் இருப்பதால் ஆதாரம் இல்லாமல் தான் பேசுவார் என்றும், எந்த சூழ்நிலையில் சரவணன் பேசினார் என்பதை பன்னீர்செல்வம் தான் விளக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தபோது காவல்துறை எங்களுக்கு உறுதுணையாக இல்லை என்றும், ஒவ்வொரு வண்டியையும் தீவிரமாக சோதனையிட்டு தான் ரிசார்ட் உள்ளே அனுமதித்தனர் என்றும் குறிபிட்டுள்ளார்.
மேலும், கூவத்தூர் பணபட்டுவாடா குறித்து திமுக வழக்கு தொடர்வதாக இருந்தால் அதை தான் வரவேற்பதாகவும், ஆதாரமில்லாமல் மறுத்து அறிக்கை விட வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.