எனக்கு சொந்த வீடுகூட கிடையாது... லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றி எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொன்ன பதில்..!

By Asianet TamilFirst Published Jul 24, 2021, 9:53 PM IST
Highlights

சென்னை, கரூரில் எனக்கு சொந்தமாக வீடு எதுவும் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  நடத்தினர். இந்தச் சோதனையில் ரூ.25,56,000 பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் விஜயபாஸ்கர் கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை, கரூரில் உள்ள எனது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இதெல்லாம் திமுகவின் பழிவாங்கும் நடவடிக்கைதான். சோதனையின்போது பறிமுதல் செய்துள்ள பணம் மற்றும் ஆவணங்களுக்கு எங்களிடம் கணக்கு உள்ளது. அதை நாங்கள் காட்டியிருக்கிறோம்.


இதுபோன்ற சோதனை, மிரட்டல்கள் மூலம் கரூரில் அதிமுகவின் செயல்பாட்டை தடுக்கலாம் என நினைக்கிறார்கள். இது ஒருபோதும் நடக்காது. என் மீது நடத்தப்படும் சோதனைகளையெல்லாம் எதிர்பார்த்ததுதான். இதைச் சட்டப்படி  நான் சந்திக்க தயார். சென்னை, கரூரில் எனக்கு சொந்தமாக வீடு எதுவும் கிடையாது. கடந்த 35 ஆண்டுகளாக கரூரில் தொழில் செய்கிறேன். ஆட்சி மாற்றத்துக்கு பிறகு திமுக ஆள் பிடிக்கும் படலத்தில் ஈடுபட்டுள்ளது. இது கண்டிக்கதக்கது. போக்குவரத்துத் துறையில் அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகளை வேண்டுமென்றே திட்டமிட்டு இடமாற்றம் செய்கிறார்கள். அனைத்து துறைகளிலும் இப்படி நடக்கிறது. இது நல்லது அல்ல. என்னுடைய வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாகக் கூறப்படுவது உண்மை அல்ல” என்று விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

click me!