திமுககாரங்க அரசியலைப் புரிஞ்சுக்கவே முடியலையே... துரைமுருகனிடம் புலம்பிய தங்க தமிழ்செல்வன்..!

By Thiraviaraj RMFirst Published Dec 23, 2021, 3:13 PM IST
Highlights

நடக்கிறது நம்ம ஆட்சியா... இல்ல அதிமுக ஆட்சியான்னு சந்தேகமா இருக்குண்ணே” என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனிடமே ஆதங்கப்பட்டாராம் தங்கம்.

அதிமுகவின் கோட்டையான ஆண்டிபட்டியில் மூன்று முறை போட்டியிட்ட (2001,11,16) தங்க தமிழ்ச்செல்வன் ஹாட்ரிக் வெற்றிபெற்று அதிமுகவில் செல்வாக்குமிக்க நபராகப் பார்க்கப்பட்டவர். டான்சி வழக்கால் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட மறுக்கப்பட்டு, முதல்வராகி மீண்டும் அப்பதவி முடக்கப்பட்டது. வழக்கில் விடுதலையான பிறகு அதிமுக கோட்டையான ஆண்டிப்பட்டி 2002 இடைத்தேர்தலில் களமிறங்கி முதலமைச்சரானார்.  ஜெயலலிதா அங்கு போட்டியிட தங்க தமிழ்ச்செல்வன் பதவியை ராஜினாமா செய்தார். 

அதிமுகவில் அந்தளவிற்குப் பிரபலமான ஆசாமியாக இருந்த இவர், ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா ஆதரவு நிலைப்பாடு எடுத்தார். அமமுகவில் இணைந்தார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் இவரும் ஒருவர். அப்போதிருந்தே இவருக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் ஏழாம் பொருத்தம் தான். அதற்குப் பின் திமுகவில் ஐக்கியமான இவருக்கு அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அசைன்மெண்ட் ஒன்றை கொடுத்தார். ஓபிஎஸ்ஸின் ஆஸ்தான தொகுதியான போடியில் அவரை தோற்கடிக்க வேண்டும் என்ற பெரிய சவால். சவாலில் ஓரளவு ஜெயித்தாலும் முழு வெற்றியை வசப்படுத்த முடியவில்லை.

தேனி மாவட்டத்தில் நடக்கும் பெரும்பாலான அரசு திட்டப்பணிகளை இப்போதும் அதிமுக காண்ட்ராக்டர்கள்தான் எடுத்துச் செய்கிறார்கள். இவர்கள் அத்தனை பேருமே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என்பதால், ஏகத்துக்கும் கடுப்பில் இருக்கிறார் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன். இதுபற்றி, “நடக்கிறது நம்ம ஆட்சியா... இல்ல அதிமுக ஆட்சியான்னு சந்தேகமா இருக்குண்ணே” என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனிடமே ஆதங்கப்பட்டாராம் தங்கம்.

 அதற்கு, “ஏம்பா, திடீர்னெல்லாம் நம்ம காண்ட்ராக்டர்களை உருவாக்க முடியாது. எத்தனை வண்டி, எவ்வளவு மெஷினரீஸ் தேவைன்னு தெரியுமா? உனக்கு என்ன வேணுமோ அதைக்கேளு. அதைவிட்டுட்டு புலனாய்வுப் புலியா எல்லாம் மாறக்கூடாது”என புத்திசொன்னாராம் துரைமுருகன். “இந்த திமுககாரங்க அரசியலைப் புரிஞ்சுக்கிடவே முடியலையேப்பா” என்று இப்போது நெருக்கமானவர்களிடம் புலம்புகிறாராம் தங்க தமிழ்செல்வன்.

click me!