#BREAKING அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை... ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு... சூப்பர் ஸ்டார் அதிரடி...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 12, 2021, 11:31 AM IST
Highlights

ரஜினி மக்கள் மன்றத்தை கலைப்பதாகவும், அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

கடந்த சட்ட மன்ற தேர்தலின் போது, அதிகார பூர்வமாக தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் கால் பதிப்பார் என ரசிகர்கள் முதல் ஒட்டு மொத்த தமிழகமே எதிர்பார்த்த நிலையில், அனைவரது ஆசையையும் பொய் ஆக்குவது போல் தன்னுடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வர வில்லை என அறிவித்தார். இருப்பினும் ஏமாற்றம் அடையாத ரசிகர்கள் கண்டிப்பாக சூப்பர் ஸ்டார் நல்ல செய்தி சொல்வார் என ஆவலுடன் காத்திருந்தனர். 


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் பரிசோதனைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்ற பின் ஜூலை 9 ஆம் தேதி சென்னை திரும்பினார். தற்போது முதல் வேலையாக இன்று தன்னுடைய மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின. நேற்று முதலே ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடினர்.  'மக்கள் மன்ற நிர்வாகிகளுடன்' ஆலோசனை நடத்திய பிறகு அறிவிப்பேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டது. சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து ரஜினி மக்கள் மன்றத்தை கலைப்பதாகவும், அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும். என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது அதை விளக்கவேண்டியது என்னுடைய கடமை. 

நான் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல பதவிகளையும், பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம். கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை, ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி. இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 
 

click me!