
தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழாவையொட்டி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப் படத்திறப்புவிழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு கருணாநிதியின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய முதலைச்சர் ஸ்டாலின்,
ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டம், தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம், மாநில சுய ஆட்சி, பெண்களுக்கு சொத்துரிமை என்று பல வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றிய பெருமை இந்த சட்டமன்றத்திற்கு உண்டு. சமூக நீதிக்காகப் பாடுபட்ட பல்வேறு சீர்திருத்த சட்டங்களை நிறைவேற்றியவர் தலைவர் கலைஞர். சமூகநீதிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் அவர்,
அதேபோல் நமது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த அவர்கள், இளம் வயது முதலே சமூக நீதியில் நாட்டம் கொண்டவர், வழக்கறிஞரான அவர், ஏழை எளிய மக்களுக்கு அவசமாக வழக்கு நடத்தியவர், சட்ட ஆலோசனை வழங்கியவர், இத்தனை சிறப்பு மிக்கவர் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்தை திறந்து வைப்பது சாலப்பொருத்தம். இந்த சட்டமன்றம் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக பல்வேறு சிறப்புமிக்க சட்டங்களை வகுத்துள்ளது. நிலச் சீர்திருத்த சட்டம் பெண்களுக்கு சொத்தில் பங்கு உரிமை, மாநில சுயாட்சித் தீர்மானம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைத்திட சட்டம் என பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய நாள் பார் போற்றும் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றிய சட்டமன்றம் இது, தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையை நிறைவேற்றிய மன்றம் இது. இன்று இந்த அவையில் கலைஞரின் புகைப்படத்தை பார்க்கும் போது சமூக நீதிக்காக போராடி தலைவர்கள் நினைவுக்கு வருகின்றனர். கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்தை குடியரசுத் தலைவர் கலைஞர் திறந்து வைத்திருப்பதில் முதல்வராக மகிழ்கிறேன், கலைஞரின் மகனாக நெகிழ்கிறேன் என அவர் கூறினார்.