
இசைஞானி இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்றும், அது அவருக்கு பொருத்தமான விருது என்றும், தேவைப்பட்டால் இதுகுறித்து பாஜக தலைமைக்கு கடிதம் எழுத தயாராக உள்ளேன் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா கருப்பு திராவிடன் என கூறியுள்ள நிலையில் நானும் திராவிடன் தான் நானும் அண்டங்காக்காய் கருப்பு தான் என அண்ணாமலை பதில் கொடுத்துள்ளார். அவரின் இந்த கருத்து வேகமாக பரவி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனியார் பதிப்பகத்தில் புத்தகம் ஒன்றுக்கு முகப்புரை எழுதிய இசை அமைப்பாளர் இளையராஜா, அதில் அம்பேத்கர் மோடியை ஒப்பிட்டு எழுதியுள்ளார். அந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதில் ஒரு சிலர் இளையராஜாவுக்கு ஆதரவாகவும், இடதுசாரி மற்றும் திராவிட சிந்தனையாளர்கள் இளையராஜாவுக்கு எதிராகவும் கருத்து கூறி வருகின்றனர். அதாவது அம்பேத்கர் கண்ட கனவை மோடி நிறைவேற்றி வருகிறார் என்றும், அம்பேத்கர் உயிருடன் இருந்திருந்தால் மோடியை பாராட்டி இருப்பார் என்றும் இளையராஜா அதில் குறிப்பிட்டிருப்பது சர்ச்சைக்கு காரணம். இந்நிலையில் இளையராஜாவுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியதற்கு இளையராஜா மன்னிப்பு கோரவேண்டும் என்றும் பலரும் கொந்தளித்து வருகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இளையராஜா பாவம் அவரை ஆர்எஸ்எஸ் காரர்கள் சுற்றிவளைத்திருக்கக்கூடும் என காட்டமாக தெரிவித்துள்ளார். இதேபோல் கருத்து தெரிவித்துள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி சுப்பராயன் வைரமும் உப்புக்களும் ஒன்றா, அம்பேத்கரும்-மோடியும் ஒன்றா என கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார். கருப்புப் பணம் அதிகரித்துவிட்டதால் பயத்தில் இளையராஜா பிதற்றுகிறார் என்றும் கூறியுள்ளார். இப்படி பலரும் பல வகையில் இளையராஜாவை விமர்சித்து வரும் நிலையில் இது குறித்து பேசிய இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் மோடி அம்பேத்கரை ஒப்பிட்டு பேசியது குறித்து மன்னிப்பு கேட்க முடியாது என இளையராஜா கூறியதாகவும், இதுதொடர்பாக தன் மீது எழுந்துள்ள விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதாக இளையராஜா தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
மோடி பற்றி தனக்கு நன்கு தெரியும், அம்பேத்கரையும் பிடிக்கும், மோடியையும் பிடிக்கும் அதனால் ஒப்பிட்டுப் பேசினேன் என இளையராஜா தன்னிடம் திட்டவட்டமாக தெரிவித்ததாக கங்கை அமரன் கூறினார். இந்நிலையில் தான் இளையராஜாவின் மகன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இளையராஜாவின் கருத்துக்கு நேர் எதிராக தான் கருப்பு திராவிடன் என்றும், தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்றும் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் கருத்து பதிவிட்டுள்ளார். இளையராஜாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில்தான் யுவன் கருத்து இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இளையராஜா விவகாரம் குறித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது:- குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கும் ராஜசபா உறுப்பினர்களுக்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே இளையராஜா ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற கேள்விக்கு என்னால் பதில் கூற முடியாது. இளையராஜா பாஜகவை சார்ந்தவரல்ல, அவரை ராஜ சபா எம்பி ஆக்குவார்களா என்பதை சொல்ல முடியாது.
ஆனால் இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதை பொருத்தமாக இருக்கும், எனவே அவருக்கு பாரத ரத்னா விருது கொடுப்பது குறித்து கட்சித் தலைமைக்கு கடிதம் எழுத தயாராக இருக்கிறேன் எனக் கூறினார். யுவன் சங்கர் ராஜா தன்னை கருப்பு திராவிடன் என கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நானும் திராவிடன் தான், நானும் கருப்புதான் நான் அண்டங்காக்காய் கருப்பு என அவர் நகைச்சுவையாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர் திருவாடுதுறை செல்லும் கவர்னருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு காட்டுவது தவறு அதிகாரத்தை பயன்படுத்திய கவர்னரை மிரட்டுகிறார்கள் காவர்னரை தடுத்து நிறுத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும். மம்தா, உத்தவ் தாக்கரே, ராஜசேகர் ராவ், முகஸ்டாலின் போன்றவர்கள் ஆளுநரை குற்றம் சொல்ல என்ன தகுதி உள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.