நான் அதிமுக எம்எல்ஏதான்… அந்தர் பல்டி அடித்த கள்ளக்குறிச்சி பிரபு !!

By Selvanayagam PFirst Published Apr 27, 2019, 7:24 AM IST
Highlights

நான் எப்போதும் அதிமுக  எம்.எல்.ஏ.,வாகத் தான் செயல்பட்டு வருகிறேன் என்றும் இடைத்தேர்தல் முடிவுக்குப் பிறகு, சட்டசபையில் நம்பிக்கை  வாக்கெடுப்பு நடந்தால், அதிமுக கொறடா உத்தரவின்படியே செயல்படுவேன் என்றும் தினகரன் ஆதரவு எம்எல்ஏ .
கள்ளக்குறிச்சி, பிரபு  அந்தர் பல்டி அடித்துள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கள்ளக்குறிச்சி அ.பிரபு, விருத்தாசலம் வி.டி.கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி  ஆகிய 3 பேர் மீது சபாநாயகரிடம் அரசு தலைமைக் கொறடா எஸ்.ராஜேந்திரன் புகார் அளித்தார்.

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ப.தனபாலை நேற்று காலையில் சந்தித்துப் பேசிய அவர், அப்போது இந்த புகார் மனுவை சபாநாயகரிடம் வழங்கினார்.இதையடுத்து சபாநாயகர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தவிட்டுள்ளார்

ஏற்கனவே டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட, வெற்றிவேல், தங்கதமிழ்ச் செல்வன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பரில் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதன் காரணமாகத்தான் அவர்கள் வெற்றி பெற்ற தொகுதிகளில் தற்போது இடைத்தேர்தல் நடந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக அதுபோன்ற நடவடிக்கைக்கான பணிகள் ஆரம்பித்துள்ளன. இதனால் 3 பேரின் எம்.எல்.ஏ. பதவிக்கும் ஆபத்து ஏற்படும். எனவே சட்டசபை வட்டாரம் மீண்டும் பரபரப்புக்குள்ளாகி இருக்கிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, நாங்கள் மூவரும், கொறடா உத்தரவை எதிர்த்து, எப்போதும் ஓட்டு போட்டதில்லை. இதுவரை சட்டசபையில் நடந்த ஓட்டெடுப்பில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாகத் தான் ஓட்டளித்துள்ளோம்.

இந்நிலையில், அரசு கொறடா எங்களை தகுதி நீக்கம் செய்ய, எதற்கு மனு அளித்துள்ளார் என்பது தெரியவில்லை. அ.ம.மு.க., என்பது, அ.தி.மு.க.,வின் ஒரு அங்கம் தானே தவிர, இது தனிக்கட்சி கிடையாது.

நான் தொடர்ந்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக உள்ளேன். அப்படித் தான் செயல்படுகிறேன்; நாங்கள் எந்த கட்சியிலும் சேர்ந்து விடவில்லை.தற்போது நடைபெறும் இடைத்தேர்தல் முடிவுக்குப் பிறகு, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தால், கொறடா உத்தரவின்படியே செயல்படுவேன்.

அதிமுகவை அழிப்பதற்காக நாங்கள் செயல்படவில்லை. அதிமுக நல்ல தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்பதே, எங்களின் நோக்கம்.தமிழகத்தில் மீண்டும், ஜெயலலிதா  ஆட்சி தொடர நாங்கள் பாடுபடுவோம். அதிகாரப்பூர்வ, 'நோட்டீஸ்' கிடைத்தவுடன், அதை சட்ட ரீதியாக நாங்கள் சந்திப்போம் என்று  பிரபு  தெரிவித்தார்..

click me!