மன்னிப்பை ஏற்கிறேன்; விளக்கத்தை ஏற்க முடியாது! பெண் நிருபர்

Asianet News Tamil  
Published : Apr 18, 2018, 02:18 PM ISTUpdated : Sep 19, 2018, 02:15 AM IST
மன்னிப்பை ஏற்கிறேன்; விளக்கத்தை ஏற்க முடியாது! பெண் நிருபர்

சுருக்கம்

I accept forgiveness The description can not be accepted! Female reporter

தனது கன்னத்தில் ஆளுநர் தட்டியதற்கு அவர் மன்னிப்பு கேட்டுள்ளதை தாம் வரவேற்கிறேன் என்றும் ஆனால், என் கன்னத்தில் தட்டியதற்கு அவர் கூறியது சரியான காரணம் இல்லை என்றும் பெண் செய்தியாளர் கூறியுள்ளார்.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளைத் தவறானச் செயலுக்கு அழைப்பது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை
ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பேராசிரியை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக சார்பிலும் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விசாரணைக் குழு, போலீஸார் விசாரணை என நடந்து வரும் நிலையில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என ஆளுநர் பன்வாரிலால் உத்தரவிட்டுள்ளார். மேலும், குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது எனவும் ஆளுநர் கூறியுள்ளார்.

இதனிடையே இந்த விவகாரத்தில் பல்வேறு வி.ஐ.பி-க்களுக்குத் தொடர்புள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், ஆளுநருக்குத் தொடர்பிருப்பதாக மார்க்ஸிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியது. இது குறித்து ஆளுநர் தரப்பில் விளக்கம் ஏதும் தரப்படவில்லை. இந்த நிலையில் சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய ஆளுநர், நிர்மலா தேவியை நான் பார்த்ததுகூட இல்லை என்றார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்குழு  அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். செய்தியாளர்கள் உடனான சந்திப்புக்குப் பிறகு, பெண் செய்தியாளர் ஒருவரிடம் சென்ற அவர், நீ என் பேத்தி போல் உள்ளாய் என்று கூறி அவரது கன்னத்தை தடவினார். ஆளுநரின் இந்த செயல் பெண் பத்திரிகையாளர் உட்பட அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய செய்தது.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்-ன் இந்த செய்கையை தாம் வெறுப்பதாக அந்த பெண் பத்திரிகையாளர் டுவிட்டரில் தெரிவித்திருந்தார். என் அனுமதி இல்லாமல் கன்னத்தை அவர் தட்டுவது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அது தவறு. அறிமுகம் இல்லாத ஒரு நபரின், அதுவும் பெண்ணின் கன்னத்தைத் தொடுவது முறையானது அல்ல. என்னுடைய முகத்தை நான் பலமுறை கழுவிவிட்டேன். இதனால் எனக்கு கோபமும் ஆத்திரமும் வருகிறது என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், பெண் செய்தியாளரின் கன்னத்தில் தட்டியது குறித்து, ஆளுநர் பன்வாரிலால் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து ஆளுநர் தனது மன்னிப்பு கடிதத்தில் கூறுகையில் எனது பேத்தி போல் இருந்ததால், பெண் செய்தியாளரின் கன்னத்தில் தட்டினேன். பெண் செய்தியாளர் கேட்ட கேள்வியைப் பாராட்டும் விதமாகவே நான் கன்னத்தில் தட்டினேன் என்றும் ஆளுநர் கூறியுள்ளார். இது தொடர்பாக ஆளுநர், சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மன்னிப்பு கேட்டுள்ளது குறித்து சம்பந்தப்பட்ட பெண் செய்தியாளர், ஆளுநரின் மன்னிப்பை தான் ஏற்பதாக கூறியுள்ளார். ஆனால், ஆளுநர் எனது கன்னத்தில் தட்டியதற்கு அவர் கூறியது சரியான காரணம் அல்ல என்றும் பெண் செய்தியாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!