
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இதில், 9,34,868 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வின்போது முறைகேடுகளில் ஈடுபடுவோரை கண்காணிக்க, 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.
6,737 பள்ளிகளில் இருந்து 4,80,837 மாணவிகளும், 4,17,994 மாணவர்களும், 3ம் பாலினத்தவர் ஒருவரும், தனித்தேர்வர்களாக 34,868 பேர், சிறை கைதிகள் 98 பேர் என 9,34,868 பேர் இன்று தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வுக்காக அமைக்கப்பட்டுள்ள 2,434 மையங்களில் 46,685 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், பார்வையற்றவர்கள், காதுகேளாதோர், வாய் பேசாதவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு எழுதுபவரை நியமித்து கூடுதலாக 1 மணி நேரம் அவகாசம் அளிக்கப்படுகிறது.
சென்னை மாநகரில் 407 பள்ளிகளில் இருந்து 145 தேர்வு மையங்களில் 28,721 மாணவிகள், 24,852 மாணவர்கள் என மொத்தம் 53,573 பேர் தேர்வெழுதுகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை பிளஸ் 2 தேர்வு, அனைத்து மையங்களிலும் தொடங்கப்பட்டது. மாணவர்கள் கேள்வி தாள்களை பெற்று, அதில் உள்ள கேள்விகளுக்கு பதில்களை எழுத தொடங்கினர். அப்போது, தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு மையத்தில் ஆய்வு செய்தார்.