
ஜெயலலிதாவின் மறைவில் மர்மம் இருப்பதாக கூறும் ஓ.பி.எஸ். தன்னிடம் காவல்துறை இருந்த காலத்தில், அதுபற்றி விசாரிக்க உத்தரவிடாதது ஏன் என முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருவொற்றியூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. முன்னாள் எம்எல்லஏ பழ.கருப்பையா கலந்து கொண்டு பேசியதாவது:-
மெரினாவில் மாணவர்கள் நடத்திய போராட்டம் போராட்டம் ஜல்லிக்கட்டுக்காக மட்டும் இல்லை. மத்திய, மாநில அரசுகள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை காட்டுவதாகவே இருந்தது. பண மாற்ற விவகாரத்தில், மக்கள் பெரும் சிரமத்தை அனுபவித்தார்கள்.
அதே போல் காவிரி தண்ணீர் உள்பட பல பிரச்சனைக்கு தமிழகம் பாதிக்கப்படுவதை, மத்திய அரசு வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது. அதே நேரத்தில் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு, கையாளாகாத நிலையில் உள்ளது. இதுபோன்ற காரணங்களே மக்களை போராட்டத்துக்கு தூண்டியது.
இந்த போராட்டத்தை எந்த தலைவரும் வழிநடத்தாமல் போனதால், அதற்கு வலு இல்லாமல் போய்விட்டது. இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு அண்ணா தலைமை வகித்த்தால், அதன் வெற்றி இன்று வரை பேசப்படுகிறது. எனவே எந்த ஒரு இயக்கத்துக்கு தலைவர்களின் வழிகாட்டுதல் அவசியம்
தீபா ஆரம்பித்துள்ள புதிய அமைப்புக்கு அவரது ஓட்டுனர் செயலாளர், ஓட்டுனரின் மனைவி தலைவர் என்பதை பார்க்கும்போது தமிழக அரசியல் எந்த அளவிற்கு நகைச்சுவையாக சென்று கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.
ஜெயலலிதாவின் மறைவில் மர்மம் இருப்பதாக இப்போது சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை வைக்கும் ஓ.பி.எஸ். தன்னிடம் காவல்துறைக்கு இருந்த காலத்தில், அதுபற்றி விசாரிக்க உத்தரவிடாதது ஏன். இப்போது தலைவி மீது பாசம் வந்த்து போல் நடிக்கிறார். அவருடன் சேர்ந்துள்ள, பொன்னையன் உள்ளிட்டவர்கள் இதை பற்றி பேசுவது, வேடிக்கையாக இருக்கிறது.