சாத்தான்குளம் விவகாரத்தில் என்னாமா கொதிச்சீங்க.? மணிகண்டன் விவகாரத்தில் திமுக கூட்டணியை வைச்சு செய்யும் பாஜக!

By Asianet TamilFirst Published Dec 6, 2021, 10:34 PM IST
Highlights

சாத்தான்குளம் விவகாரத்தில் திமுகவினரும், மற்ற கூட்டணி  கட்சியினரும் காவல்துறை மற்றும் அன்றைய அரசு மீது வைத்த விமர்சனங்கள் இந்த விவகாரத்திற்கும் பொருந்தும். ஆனால், அன்று கொதித்தெழுந்த திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மணிகண்டனின் மரணத்தில்  கைகட்டி, வாய்பொத்தி நிற்பது அவர்களின் அரசியல் அநாகரீகம்

முதல்வர் ஸ்டாலின் சாத்தான்குளம் விவகாரத்தில் என்ன கோரிக்கைகள் வைத்தாரோ,  அதை  மணிகண்டன் விவகாரத்தில் செயல்படுதத வேண்டியது கட்டாயம் என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் அருகே நீர்க்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணகுமார் மகன் மணிகண்டன். 21 வயதான அவர் கோட்டைமேடு அரசு கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நண்பர்கள் இருவருடன், நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு, பரமக்குடியில் இருந்து கீழத்துாவலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். கீழத்துாவல் போலீஸ் ஸ்டேஷன் அருகே, வாகன சோதனையில் நிற்காமல் சென்றதால், போலீசார் விரட்டிப் பிடித்தனர்.  நண்பர்கள் இருவரும் ஓடிவிட மணிகண்டனை மட்டும் விசாரணைக்கு ஸ்டேஷன் அழைத்து சென்றனர். பின்னர், இரவு 7:30 மணிக்கு வீட்டுக்கு போன் செய்து அழைத்து செல்லும்படி போலீஸார் கூறியதாகத் தெரிகிறது. அப்போதே நடக்க முடியாத அளவில் மணிகண்டன் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை 1:00 மணிக்கு வீட்டில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மணிகண்டன் உயிரிழந்தார்.

போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வந்த பிறகு, மணிகண்டன் ரத்த வாந்தி எடுத்ததாகவும் ஆணுறுப்பு வீங்கியிருந்ததாகவும் சொல்கிறார்கள். எனவே, போலீஸ் அடித்துதான் மணிகண்டன் இறந்தார் என்பது அவருடைய உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். என்றாலும் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு, அவர் எப்படி இறந்தார் என்பது தெரிய வரும். இ ந் நிலையில் இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கெனவே பதிவிட்டிருந்த நிலையில், அக்கட்சியில் மாநில செய்தித் தொடர்பாள நாராயணன் திருப்பதியும் ஃபேஸ்புக் பக்கத்தில் இதுதொடர்பாகப் பதிவிட்டுள்ளார்.

அதில், “ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர், மேலத்தூவல் கிராமத்தில் காவல்துறையினரின் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட  மணிகண்டன்  உயிரிழந்தது வருந்தத்தக்கது. காவல் துறையினரின் தாக்குதலால் உயிர் பிரிந்திருக்குமானால் வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக இது குறித்து தீவிர விசாரணை நடத்தி, குற்றம் நடந்திருந்தால்  தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சாத்தான்குளம் விவகாரத்தில் திமுகவினரும், மற்ற கூட்டணி  கட்சியினரும் காவல்துறை மற்றும் அன்றைய அரசு மீது வைத்த விமர்சனங்கள் இந்த விவகாரத்திற்கும் பொருந்தும். 

ஆனால், அன்று கொதித்தெழுந்த திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மணிகண்டனின் மரணத்தில்  கைகட்டி, வாய்பொத்தி நிற்பது அவர்களின் அரசியல் அநாகரீகத்தை, ஓர் உயிரின் மீதான அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. ஓர் இளைஞனின் உயிரில் அரசியல் செய்யாது, அந்தக் குடும்பத்திற்கு நீதி வழங்கப்பட வேண்டும். முதல்வர் ஸ்டாலின் சாத்தான்குளம் விவகாரத்தில் என்ன கோரிக்கைகள் வைத்தாரோ,  அதை  மணிகண்டன் விவகாரத்தில் செயல்படுதத வேண்டியது கட்டாயம்.” என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

tags
click me!