ராமநாதபுரத்தில் ஒரு ‘ஜெய்பீம்’ கொடூரம்.? மூடி மறைக்காதே... ஓங்கி குரல் கொடுக்கும் அண்ணாமலை.!

By Asianet TamilFirst Published Dec 6, 2021, 9:53 PM IST
Highlights

ஜெய்பீம் படத்தில் போலீஸாரால் நிகழ்த்தப்படும் லாக் அப் கொலை காட்சி, தமிழகத்தில் பேசுபொருளானது. இந்நிலையில் அதுபோன்ற ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

ராமநாதபுரத்தில் மணிகண்டன் இறந்த விவகாரத்தில், காவல்துறை துன்புறுத்தலால் இறந்திருக்கலாம் என்கின்ற குற்றச்சாட்டை மூடி மறைக்காமல் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் அருகே நீர்க்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணகுமார் மகன் மணிகண்டன். 21 வயதான அவர் கோட்டைமேடு அரசு கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நண்பர்கள் இருவருடன், நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு, பரமக்குடியில் இருந்து கீழத்துாவலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். கீழத்துாவல் போலீஸ் ஸ்டேஷன் அருகே, வாகன சோதனையில் நிற்காமல் சென்றதால், போலீசார் விரட்டியதில் இருவர் இறங்கி தப்பினர். மணிகண்டனை மட்டும் விசாரணைக்கு ஸ்டேஷன் அழைத்து சென்று, இரவு 7:30 மணிக்கு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 1:00 மணிக்கு வீட்டில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மணிகண்டன் உயிரிழந்தார்.

போலீசார் தாக்கியதில் தான் அவர் உயிரிழந்ததாகக் கூறி, முதுகுளத்துார் - பரமக்குடி சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தியதை அடுத்து, கலைந்து சென்றனர். ஆனால், போலீஸார் அடித்ததால்தான் மணிகண்டன் உயிரிழந்ததாக அவருடைய உறவினர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வந்த பிறகு, அவர் ரத்த வாந்தி எடுத்ததாகவும் சொல்கிறார்கள். ஆனால், கீழத்துாவல் போலீஸ் ஸ்டேஷனில், விசாரணைக்காக மணிகண்டன் வந்து செல்லும் 'சிசிடிவி' பதிவுகள் உள்ளன. பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.

இதற்கிடையே மணிகண்டன் பிறந்த நாளிலேயே உயிரிழந்தது, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ட்விட்டரில் மணிகண்டன் மரணத்திற்கு நீதி  கேட்டு  #JusticeForManikandan என்கிற ஹாஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அதில்,  “ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சார்ந்த சகோதரர் மணிகண்டன் அவர்களுடைய மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. வாகன பரிசோதனையின் போது அழைத்துச் செல்லப்பட்ட சகோதரர் காவல்துறை துன்புறுத்தலால் இறந்திருக்கலாம் என்கின்ற குற்றச்சாட்டை மூடி மறைக்காமல் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு எந்த மட்டத்தில் நடந்திருந்தாலும் கூட, உரிய தண்டனை அளிக்க வேண்டும். சகோதரரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

ஜெய்பீம் படத்தில் போலீஸாரால் நிகழ்த்தப்படும் லாக் அப் கொலை காட்சி, தமிழகத்தில் பேசுபொருளானது. இந்நிலையில் அதுபோன்ற ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

click me!