உள்ளாட்சி பதவிகளில் காங்கிரஸுக்கு எத்தனை இடங்கள்..? முதல்வர் ஸ்டாலினிடம் காங்கிரஸ் கட்சி அடம்.!

By Asianet TamilFirst Published Oct 19, 2021, 9:39 PM IST
Highlights

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற இடங்களில், காங்கிரஸ் கட்சிக்குப் பதவிகளை ஒதுக்கி  தரும்படி திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை அக்கட்சி வற்புறுத்தியுள்ளது.
 

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றது. இத்தேர்தலில் வெற்றிபெற்ற கிராம ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் நாளை (20-ஆம் தேதி) பதவி ஏற்க உள்ளார்கள். கவுன்சிலர்கள் சேர்ந்து ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிகளைத் தேர்வு செய்வார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தப் பதவிகளைப் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. 
9 மாவட்டங்களிலும் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கைபடி பார்த்தால், அனைத்து பதவிகளையும் திமுகவே கைப்பற்றும் நிலை உள்ளது. ஆனால், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு பதவிகள் கேட்டு அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் பேசிவருகிறார்கள். கடந்த முறை இந்தப் பதவிகளை திமுகவினர் உரிய முறையில் வழங்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை வெளியிட்டு, திமுக  தலைமையிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார்.
இந்நிலையில் இந்த முறை பதவிகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா உள்ளிட்டோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியிருக்கிறார்கள். இந்தச் சந்திப்பின்போது 8 ஒன்றிய தலைவர்கள் பதவி மற்றும் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கித் தரும்படி வற்புறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சி விரும்பும் இடங்களுக்கான பட்டியலையும் அப்போது ஸ்டாலினிடம் அழகிரி வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

click me!