எப்படி நம்பிக்கை வரும்..? காவல்துறைக்கே களங்கம்... சதுரங்க வேட்டை லேடி இன்ஸ்பெக்டருக்கு ஜாமின் மறுப்பு..!

By Thiraviaraj RMFirst Published Sep 7, 2021, 5:21 PM IST
Highlights

விசாரணையை பாதிக்கும் என்பதால் வழக்கின் விவரத்தை தர இயலாது என்று கூறிய நீதிபதி, முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, இந்திராநகரை சேர்ந்தவர் 32 வயதான அர்ஷத். சொந்தமாக லெதர் பைகள் தயாரிக்கும் கம்பெனி வைக்க சிலரிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்துடன் மதுரை, நாகமலைபுதுக்கோட்டைக்கு கடந்த ஜூலை மாதம் 5-ம்தேதி வந்தார். அங்கு ஒருவரிடம் ரூ.5 லட்சம் கடன் பெறுவதற்காக மாவு மில் அருகில் நின்றிருந்தார்.

அப்போது அங்கு நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி போலீஸ் வாகனத்தில் வந்துள்ளார். அர்ஷத்திடம் ரூ.10 லட்சத்தை பையுடன் இன்ஸ்பெக்டர் வசந்தி பறித்துக்கொண்டதாகவும், இந்த பணத்தை திரும்ப கேட்டால், கஞ்சா வழக்கு போட்டு கைது செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. 

இது குறித்து அர்ஷத், மதுரை மாவட்ட எஸ்.பியிடம் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து இன்ஸ்பெக்டர் வசந்தி உள்பட சிலர் மீது வழக்குபதிவு செய்தனர். இதையடுத்து வசந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் வசந்தியின் முன்ஜாமீன் மனு நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் வசந்தி கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். எனவே இந்த மனுவை வாபஸ் பெறுகிறோம் என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  ஆனால், இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து இந்த நீதிமன்றம் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறது.

மனுதாரர் கைது செய்யப்பட்டதற்கு பின்னர் இந்த வழக்கின் முன்னேற்றம் என்ன? அர்ஷத்திடம் இருந்து பறித்த ரூ.10 லட்சம் யாரிடம் உள்ளது? அதை போலீசார் பறிமுதல் செய்துவிட்டனரா? என்பது குறித்த தகவல்களை கேட்டு இந்த நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி அரசு வழக்கஞரிருக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் கேட்டதன் பேரில் வழக்கின் விவரங்கள் பற்றி விசாரணை அலுவலர் தரப்பில் விளக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 'வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த இன்ஸ்பெக்டர் வசந்தியால் காவல்துறைக்கே களங்கம்.

யார் தவறு செய்தாலும் தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு காவல்துறை ஏற்படுத்த வேண்டும். காவலர்களே குற்ற செயல்களில் ஈடுபடுவதால் சாதாரண மக்கள், காவல்துறை மீதான நம்பிக்கையை இழக்கும் நிலை உள்ளது. விசாரணையை பாதிக்கும் என்பதால் வழக்கின் விவரத்தை தர இயலாது என்று கூறிய நீதிபதி, முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

click me!