சிங்கங்களுக்கு எப்படி கொரோனா வந்தது..? தப்பு செய்தவர்களை விடக்கூடாது... டாக்டர் ராமதாஸ் ஆவேசம்.!

By Asianet TamilFirst Published Jun 5, 2021, 9:33 PM IST
Highlights

வண்டலூரில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது குறித்தும் ஒரு சிங்கம் உயிரிழந்தது குறித்தும் விரிவான விசாரணை தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நீலா என்று பெயர் சூட்டப்பட்ட பெண் சிங்கம் கொரோனாவால் நேற்று உயிரிழந்தது. இதனையடுத்து பூங்காவில் எல்லா சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் கலந்தாலோசித்து கொரோனா பாதிப்பில் உள்ள சிங்கங்களுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சிங்கங்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளும் தொற்றுக்குரியவ சிகிச்சையும் வழங்கப்பட்டுவருகின்றன.
இதற்கிடையே சிங்கங்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. சிங்கங்களுக்கு கொரோனா தாக்குதல் ஏற்பட்டிருப்பதும், ஒரு சிங்கம் உயிரிழந்திருப்பதும் விலங்குகள் நல ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விரிவான விசாரணை தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், ஒரு சிங்கம் உயிரிழந்துவிட்டதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சிங்கங்களிடமிருந்து பிற விலங்குகளுக்கும் தொற்று பரவாமல் தடுக்க வேண்டும்!
வண்டலூர் உயிரியல் பூங்கா பல வாரங்களாக மூடப்பட்டிருக்கிறது. பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. பயிற்சியாளர்களும், உணவு வழங்கும் பராமரிப்புக் குழுவினரும் மட்டுமே விலங்குகளை நெருங்க முடியும் எனும் நிலையில் அவற்றுக்குத் தொற்று எவ்வாறு ஏற்பட்டது? விலங்குகளைப் பராமரிக்கும் குழுவினருக்கு கொரோனா ஆய்வு செய்யப்பட்டதா? அவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டனவா? அவர்கள் மூலமாக சிங்கங்களுக்கு கொரோனா பரவியிருக்கலாமா? என்பது குறித்து விசாரணை தேவை. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

click me!