அதிமுகவுக்கு பாஜக எப்படி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடியும்..? நறுக் கேள்வி கேட்ட அன்வர் ராஜா..!

By Asianet TamilFirst Published Dec 27, 2020, 9:40 PM IST
Highlights

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்கிற அதிமுகவின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு வந்தால் அவர்களைச் சேர்த்துக்கொண்டு பயணிப்போம் என்று முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா பேசினார். 
 

அதிமுக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை ஏற்பதில் பாஜக போக்குக் காட்டிவருகிறது. அக்கட்சியின் மா நில நிர்வாகிகள் தொடங்கி மத்தியில் உள்ளவர்கள் வரை, முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமைதான் அறிவிக்கும் என்று பேசிவருகிறார்கள். இதற்கு அதிமுக அமைச்சர்களும் நிர்வாகிகளும் அவ்வப்போது பாஜகவுக்கு பதிலடி கொடுத்தாலும், முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கிறது பாஜக.
இந்நிலையில் அதிமுக சார்பில் இன்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா பேசுகையில், “அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுகவுக்கான தேர்தல் பிரசாரக் கூட்டம்தான் இன்று நடைபெறுகிறது. கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்தபிறகே கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெறும்.
முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை அறிவிக்கும் என்றால் அது எப்படி முடியும்? அது அவர்களுடைய கட்சிக்குதான் அறிவிக்க முடியும். அதிமுகவுக்கு எப்படி அறிவிக்க முடியும்? அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பதை ஏற்கெனவே ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துவிட்டார். அதிமுக 6 முறை ஆட்சியைப் பிடித்துள்ளது. 2016-ல் தனித்து நின்றே ஆட்சியைப் பிடித்தது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதற்குமேல் கூட்டணி என்று வரும்போது, அதிமுக தலைமையில் கூட்டணி, முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்கிற எங்கள் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு வந்தால் அவர்களைச் சேர்த்துக்கொண்டு பயணிப்போம்” என்று அன்வர் ராஜா பேசினார். 
 

click me!