உதிர்ந்து உதிர்ந்து மலர்ந்த இரட்டை இலை.. துளிர்த்த கதை தெரியுமா..?

First Published Nov 23, 2017, 5:49 PM IST
Highlights
how and when created two leaves symbol for admk


அதிமுக என்ற உடனேயே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா., ஆகியோருக்கு நிகராக நினைவுக்கு வருவது இரட்டை இலை சின்னம்தான். அந்தளவுக்கு பட்டி தொட்டியெங்கும் சென்று சேர்ந்திருக்கிறது இரட்டை இலை சின்னம்.

அதிமுகவை வழிநடத்தும் தலைவர்களின் மறைவிற்குப் பிறகு கட்சி உடைவதும் இரட்டை இலை முடக்கப்படுவதும், பின்னர் இரட்டை இலை மீட்கப்படுவதும் வழக்கமாக உள்ளது.

இலையின் முதல் உதிர்வு:

1987-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைந்ததும், அதிமுக இரண்டாக உடைந்தது. ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும் ஜானகி தலைமையில் மற்றொரு அணியுமாக செயல்பட்டது. 1989-ம் ஆண்டு தேர்தலை பிளவுபட்ட அதிமுக சந்தித்தது. அப்போது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஜானகி அணிக்கு இரட்டை புறா சின்னமும், ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும் ஒதுக்கப்பட்டது.

அந்த தேர்தலில் 175 இடங்களில் போட்டியிட்ட ஜானகி அணி, ஒரு இடத்தைக்கூட பிடிக்க முடியாமல் படுதோல்வியை சந்தித்தது. ஆனால், ஜெயலலிதா தலைமையிலான அணி, 27 இடங்களை வென்று, இரண்டாவது இடத்தை பிடித்தது.

இந்த தேர்தலுக்குப் பின்னர், ஜெயலலிதாவை எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக அறிவித்துவிட்டு ஜானகி அரசியலிலிருந்து ஒதுங்கினார். இதையடுத்து அதிமுகவும் ஒன்றுபட்டது. இரட்டை இலை சின்னமும் மீட்கப்பட்டது.

இரண்டாவது முறை உதிர்ந்த இலை:

அதன்பிறகு 28 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கி, தனி அணியாக செயல்பட்டபோது முடக்கப்பட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது அப்போதைய சசிகலா அணியும் பன்னீர்செல்வம் அணியும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இதையடுத்து தேர்தல் ஆணையம் இரட்டை இலையை முடக்கியது.

பின்னர் நீண்ட இழுபறிக்குப் பிறகு பழனிசாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைந்து, சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு ஒதுக்கினர். இதையடுத்து ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பும் தினகரன் தரப்பும் இரட்டை இலையை தங்களுக்கே ஒதுக்கக்கோரியது. இருதரப்பு வாதங்களையும் கேட்டு, இருதரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், இரட்டை இலையை ஓபிஎஸ்-இபிஎஸ் அணிக்கு ஒதுக்கியுள்ளது.

இவ்வாறு இரண்டுமுறை இரட்டை இலை முடக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. இரண்டுமுறை உதிர்ந்த இலை, மீண்டும் மலர்ந்த கதையை பார்த்தோம். அதிமுக துளிர்த்தது எப்படி என்று பார்ப்போம்..

அதிமுக துளிர்த்தது எப்படி..?

திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு 1973-ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. புதிதாகத் தொடங்கப்பட்ட அதிமுக அந்தத் தொகுதியில் போட்டியிடும் என்று எம்ஜிஆர் அறிவித்தார். வேட்பாளரின் செல்வாக்கு, சாதி பலம் என்பன உள்ளிட்ட அம்சங்களைக் கணக்கிட்டுப் பார்த்த எம்ஜிஆர், மாயத்தேவரை வேட்பாளராக அறிவித்தார்.

அப்போது தனக்கான சின்னத்தைத் தேர்வுசெய்ய மதுரை மாவட்ட ஆட்சியரை அணுகினார் வேட்பாளர் மாயத்தேவர். அப்போது அவரிடம் 16 சுயேட்சை சின்னங்கள் காட்டப்பட்டன. அவற்றிலிருந்து இரட்டை இலையைத் தேர்வுசெய்தார் மாயத்தேவர். 

அந்த இடைத்தேர்தலில் மாயத்தேவர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். 

இரட்டை இலை அதிகாரபூர்வமான சின்னமாக மாறியதும் அதைச் சுவர்களில் வரைந்து மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தினர் தொண்டர்கள். அதன்பின்னர் இரட்டை இலையையும் ஒரு அடையாளமாக ஆக்கிக்கொண்டார் எம்ஜிஆர். மக்களை சந்திக்கும்போது, கைக்கூப்புவதுபோல, இரண்டு விரல்களை உயர்த்திக் காட்டுவதையும் வழக்கமாக்கிக்கொண்டார் எம்ஜிஆர். பின்னாளில் அதுவே அதிமுகவின் அடையாளமாகவே மாறிவிட்டது.

அதேவேகத்தில் 1974-ல் கோவை மேற்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது, அதிமுக வேட்பாளரான அரங்கநாயகம் இரட்டை இலையில் வெற்றிபெற்று முதன்முறையாகச் சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். 1977-ல் நடந்த மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றது அதிமுக.

இப்படியாகத்தான் இரட்டை இலை முதன்முதலில் துளிர்த்தது. இப்போது, அதிமுகவின் அடையாளமாக அறியப்படும் இரட்டை இலையை தேர்ந்தெடுத்தவர் மாயத்தேவர்தான். அதுவே பின்னாளில் அதிமுகவின் நிரந்தர சின்னமாக மாறிவிட்டது.
 

click me!