உங்களுக்குத்தான் இந்தி தாய்மொழி.. எங்களுக்குக் கிடையாது.. இந்திய தணிக்கை தலைவரை கும்மிய தமிழக எம்.பி.!

By Asianet TamilFirst Published Oct 25, 2021, 7:40 PM IST
Highlights

இந்தி மொழியை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற இந்திய தணிக்கையாளர் கழக தலைவருக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

“இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழி இந்தி. எனவே, இந்திய தணிக்கையாளர் கழக பணிக் கலாச்சாரத்தில் இந்தியை இணைத்துக் கொள்ள வேண்டும்”' என்று அதன் தலைவர் ஜம்பு சாரியா கூறியிருந்தார். அவருக்கு எதிராக தமிழக எம்.பி.கள் திரும்பியுள்ளனர். அவருடைய கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்று மதுரை  எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜம்பு சாரியாவுக்கு கடிதம் ஒன்றை சு. வெங்கடேசன் அனுப்பியுள்ளார். அதில், “ஜம்பு சாரியா உங்கள் கூற்று அதிர்ச்சி தருகிறது. இந்தியாவில் 1950 மொழிகள் உள்ளன. 32 மொழிகள் தலா 10 லட்சம் பேருக்கு மேலானவர்களின் சொந்த மொழி. 28 மொழிகள் தலா ஒரு லட்சம் பேருக்கு மேலானவர்களின் சொந்த மொழி.


இந்தி என்பது எல்லாருக்குமான தாய் மொழி கிடையாது. உங்கள் கழகத்தில் உள்ள எல்லா தணிக்கையாளர்களுக்கும் இந்தி தாய் மொழி அல்ல. உங்கள் கழகத்தின் சேவையைப் பயன்படுத்துகிறவர்கள் எல்லாருக்குமானதும் அல்ல இந்தி. ஆகவே உங்கள் கூற்று உண்மையும் அல்ல. அது, இந்திய நாட்டின் மொழிப் பன்மைத்துவத்திற்கு எதிரானது. உங்களுடைய நிறுவனம் நாடாளுமன்றத்தின் சிறப்பு சட்டம் மூலம் உருவாக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டநெறிகளை கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடு உடையது. பிராந்திய மொழிகள் என்ற தலைப்பிலான பிரிவுகள் 345, 346-ஐ படித்து பாருங்கள்.
இந்தி பேசாத மாநிலங்கள் மீது அதை திணிக்க முடியாது. மாநில சட்டப்பேரவைகள் ஆங்கிலம் தொடர வேண்டும் என்று சொல்கிற வரை ஒன்றிய அரசுத் துறைகள், அதன் தகவல் தொடர்புகளில் இந்தியைப் பயன்படுத்த முடியாது. இந்திய அரசியல் சாசனம் 8-ஆவது அட்டவணை 22 மொழிகளை அங்கீகரித்துள்ளது என்பதை மறக்கக்கூடாது. எனவே, உங்கள் கழகமும் சட்டத்திற்கு உட்பட்டு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும். சட்டத்துக்கு விரோதமான அணுகுமுறையை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஜம்பு சாரியா அவர்களே, இந்தி உங்களின் தாய் மொழியாக இருக்கலாம். அதன் மீது உங்களுக்கு அளவற்ற பற்று இருக்கலாம். என்னுடைய தாய் மொழி தமிழ். எனக்கு என் தாய் மொழியின் மீது உள்ள பற்று உங்களைவிட அதிகமானது. எனக்கு மட்டுமல்ல, உங்கள் தணிக்கை முடிவுகளை நம்பி பயன்படுத்தும் ஒவ்வொரு குடிமக்களுக்கும் அவரவர் தாய்மொழி மீது அளவற்ற பற்று உண்டு. உங்கள் கூற்று, இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த கோடிக் கணக்கான மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறது. எனவே, உங்களுடைய ‘தாய் மொழி’ கருத்து திரும்பப் பெறப்பட வேண்டும். அரசியல் சாசன நெறிகளுக்கு உட்பட்டு உங்கள் கழகத்தின் மொழிப் பயன்பாடு அமைய வேண்டும்.” என்று கடிதத்தில் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

click me!