
பாஜக ஆட்சி செய்கிற மாநிலங்களில் மட்டுமே இந்த காட்டுமிராண்டி அரசியல் கட்டவிழ்த்துவிடப்படுகிறது என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி விமர்சனம் செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு வகுப்பறைக்குள் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அந்த மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஹிஜாப் அணிந்துவந்தால், காவித் துண்டு அணிந்து வருவோம் என்று கூறி பல பகுதிகளிம் இந்துத்துவ மாணவ அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஹிஜாப் அணிய பல கல்லூரி நிர்வாகங்கள் தடை விதித்தன். இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையானது. இந்நிலையில் கல்லூரிக்கு புர்கா அணிந்து வந்த இஸ்லாமிய பெண்ணிடம் ‘ஜெய்ஸ்ரீராம்’ என்று கோஷம் எழுப்பியவர்களிடம், ‘அல்லாஹு அக்பர்’ என்று அந்த மாணவி பதிலுக்கு கோஷம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தனியொரு பெண்ணை ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம்' ஜெய் ஸ்ரீராம்' கோஷம் எழுப்பியபடி துரத்திக்கொண்டு வருகிறது. பார்க்கும் போதே நெஞ்சு பதைக்கிறது. ஆனால் அந்தப் பெண் அச்சமற்று அவர்களை எதிர்கொள்கிறார். இதைத்தான் நாம் ஒவ்வொருவரும் ஆர் எஸ் எஸ், பாஜக மதவெறி அரசியலுக்கு எதிராக செய்ய வேண்டும். பாஜக, ஆர்எஸ்எஸ் மாணவர்களை, மதவெறியர்களாக, மாற்றிவருகிறது. ஆனால் இந்த இயக்கங்களின் தலைவர்கள் வீட்டுப் பிள்ளைகள் இப்படி வீதியில் இறங்கி காட்டுமிராண்டிகள் போல் நடந்துகொள்வதில்லை.
வெளிநாடுகளில், புகழ்பெற்ற கல்லூரிகளில் படிக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். பாஜக ஆட்சிசெய்கிற மாநிலங்களில் மட்டுமே இந்த காட்டுமிராண்டி அரசியல் கட்டவிழ்த்துவிடப்படுகிறது. தமிழகம், கேரளா, ஆந்திரா, பஞ்சாப், மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், மே.வங்கம் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இப்படி மாணவர்கள் மதவெறிபிடித்து அலைவதில்லை. பாஜக இதை திட்டமிட்டு தூண்டுகிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் தமிழகத்திற்கு மட்டுமல்ல மனித குலத்திற்கே விரோதமானது. நாம் அவர்களை அச்சமற்று, நேர்நின்று எதிர்ப்பதன மூலமே நமது பிள்ளைகளையும், நமது தேசத்தையும் காப்பாற்ற முடியும். தேச விரோத ஆர்எஸ்எஸ், பாஜகவை எதிர்ப்பதே உண்மையான தேசப்பற்று.” என்று ஜோதிமணி பதிவிட்டுள்ளார்.