
நெடுஞ்சாலைத்துறையில் சாலை பராமரிப்புப் பணிகளில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். உலக வங்கியின் வழிகாட்டுதலின் படியே நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழக ஆளுநரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் நடந்திருப்பதாகவும் மற்றும் அமைச்சர்கள் ஊழல் செய்திருப்பதாகவும் புகார் கூறியிருந்தார். எனவே இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் ஜெயக்குமார் தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார். மேலும் பொள்ளாச்சி கோட்ட சாலைப் பராமரிப்பு பணியில் முறைகேடும் நடைபெறவி்லலை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உலக வங்கியின் வழிகாட்டுதலின் படியே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சாலை பராமரிப்பு பணிகளால் அரசு ரூ.527.73 கோடியை சேமித்துள்ளது என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.