நிலுவையில் உள்ள கொலை வழக்குகள்.. அறிக்கை அளிக்கும்படி, சென்னை காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

By Ezhilarasan BabuFirst Published Jan 7, 2021, 3:50 PM IST
Highlights

அப்போது மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகியிருந்தார். அவரிடம் நீதிபதி, சென்னை நகரில் என்ன நடக்கிறது எனவும், கொலை வழக்குகள் 15,16 ஆண்டுகள் நிலுவையில் இருக்கிறது எனவும், இத்தனை ஆண்டுகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணை கைதிகளாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள கொலை வழக்குகள் எத்தனை என அறிக்கை அளிக்கும்படி, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 5 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் துரைராஜ் என்பவர் சார்பில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகியிருந்தார். அவரிடம் நீதிபதி, சென்னை நகரில் என்ன நடக்கிறது எனவும், கொலை வழக்குகள் 15,16 ஆண்டுகள் நிலுவையில் இருக்கிறது எனவும், இத்தனை ஆண்டுகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணை கைதிகளாக உள்ளதாகவும் தெரிவித்தார். புதிய வழக்குகளில் கூட சாட்சிகள் பல்டி அடித்து விடும் நிலையில், 15 ஆண்டுகள் வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தால், சாட்சி சொல்ல யார் வருவார்கள், எப்படி தண்டனை பெற்று கொடுக்கப் போகிறீர்கள் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். 

மேலும், சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள கொலை வழக்குகள் எத்தனை என, ஜனவரி 25ம் தேதி அறிக்கை அளிக்கும்படி, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அறிக்கைக்குப் பின்னர் காவல் ஆணையரை அழைத்து விளக்கம் கேட்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம், பவாரியா கொள்ளை கும்பலால் கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 பேர்  இன்னும் தலைமறைவாக உள்ளனர் என்றும், மீதமுள்ளவர்களுக்கு எதிரான வழக்கை முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

 

click me!