
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ளன. அதனால் அதிமுக அணிகள், திமுக, பா.ஜ.க என அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
தினகரன் தரப்பில் குவிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் வெளிமாவட்ட அதிமுக தொண்டர்களும், வாரி இறைக்கப்படுவதாக சொல்லப்படும் பணமும், பேசப்படும் தங்கமும் மற்ற கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஓ.பி.எஸ் அணியும், திமுகவும்தான் தினகரனுக்கு சிம்ம சொப்பனம் என்றால், பா.ஜ.க வின் அச்சுறுத்தல்களும் அதற்கு கொஞ்சமும் சளைத்தவை அல்ல என்றே தோன்றுகிறது.
கடந்த தேர்தலில், சுயேச்சை சின்னம் குழப்பியதால், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் மிக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் தோற்றார்.
அதற்கு முந்தைய தேர்தலில், கூடைக்கும் முரசுக்கும் பெரிதாக வித்யாசம் தெரியாததால், சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது தேமுதிக.
இதை கருத்தில் கொண்டு, ஹெல்மெட் சின்னத்தில் போட்டியிடும் ஒரு சுயேச்சை வேட்பாளரை கையில் வைத்துக் கொண்டு, தொப்பி சின்னத்தை குழப்பும் வேலையில் எதிர்க்கட்சிகள் இறங்கி உள்ளன.
இது, தினகரனுக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தும் என்பது எதிர்க்கட்சிகளின் கணக்கு. எனவே, அது தினகரனுக்கு சற்று அச்சுறுத்தலாகவே உள்ளது.
எம்.ஜி.ஆர் படத்தில் தொப்பியை பொருத்தி தினகரன் ஒருபக்கம் வாக்கு சேகரிக்க, மறுபக்கம் எம்.ஜி.ஆர் படத்தில் ஹெல்மெட்டை பொருத்தி சுயேச்சை வேட்பாளரை வாக்கு சேகரிக்க அனுப்ப உள்ளது பா.ஜ.க.
படை பலம், பண பலம், ஆட்சி-அதிகார பலம் என அனைத்து பலத்துடனும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் தினகரன்.
ஆனால், சின்ன, சின்ன சில்மிஷங்கள் மூலம் அவரை அவ்வப்போது டென்ஷனாக்கி வருகின்றன எதிர்க்கட்சிகள். அதில் ஒன்றுதான் ஹெல்மெட் வியூகம்.
அது, எந்த அளவுக்கு பலன் தரும் என்பது போகப் போகத்தான் தெரியும்.