
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்திருந்த வேட்பாளர்களில் 8 சுயேட்சை வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற்றுள்ளனர். மேலும் 62 பேர் மட்டுமே தற்போது களத்தில் உள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தனர். இதற்கான மனுதாக்கல் கடந்த 16 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்றது.
சசிகலா தரப்பில் டி.டி.வி தினகரனும், ஒ.பி.எஸ் தரப்பில் மதுசூதனனும், பா.ஜ.க சார்பில் கங்கை அமரனும், தீபா பேரவை சார்பில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவும் உள்ளிட்ட சுயேட்சைகள் உள்பட 127 பேர் மனுதாக்கல் செய்தனர்.
அதற்கான மனு பரிசீலனை கடந்த 24 ஆம் தேதி ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சில கட்சிகளின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் 70 பேரின் மனுதாக்கல் மட்டும் அங்கீகரிக்கப்பட்டன.
இந்நிலையில், வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான இன்று 8 சுயேட்சைகள் மனுவை வாபஸ் பெற்றனர். தற்போது62 பேர் மட்டுமே ஆர்.கே.நகரில் போட்டியிட களத்தில் உள்ளனர்.
இதனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மின்னணு வாக்குபதிவுக்கு எந்த சிக்கலும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான நேரம் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.