ஹலோ நான் ஸ்டாலின் பேசுகிறேன்... புதிய திட்டத்தை கையிலெடுத்த பி.கே... பட்டென திருப்படியடிக்கும் சமூக ஆர்வலர்கள்

By Thiraviaraj RMFirst Published Aug 26, 2020, 6:09 PM IST
Highlights

வயதானவர்கள் மட்டுமல்லாமல், சமூக ஆர்வளர்களான இளைஞர்களையும் குறி வைக்கும் அவர்கள், கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சவிருப்பதாகவும் அதற்கும் நல்ல ரிசல்ட் கிடைத்திருப்பதால், தேர்தல் ரிசல்ட்டும் நல்லபடியாகவே இருக்கும் எனவும் நம்புகிறாராம் ஸ்டாலின். 

வரவிருக்கும் 2021 சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தி.மு.க. ‘இப்போது இல்லையென்றால், இனி எப்போதுமே இல்லை’ என்ற மனநிலைக்கு தி.மு.க.வினரே வந்து விட்டனர்.  தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பிரசாந்த் கிஷோரின் வியூகங்கள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், பொதுமக்களுக்கும் குறிப்பாக, நடுநிலையாளர்களுக்கும் ஒரு நேரடித் தொடர்பை ஏற்படுத்துவதுதான் என்று கூறப்படுகிறது. இதற்காக, முதலில், தமிழகத்தின் அனைத்துப் பெருநகரங்களிலும் தி.மு.க. அனுதாபிகள், சமூக ஆர்வலர்கள், பொதுநல அமைப்புகளில் உள்ளவர்கள் என ஒவ்வொரு வார்டிலும் 90 பேரின் பெயர் விவரங்களை வாட்ஸ்அப் எண்ணுடன் சேகரித்து அனுப்பும்படி அந்தந்த வட்டங்களின் தி.மு.க. செயலாளர்களை அறிவுறுத்தியது.

அடுத்ததாக, பெருநகரங்களில் உள்ள அனைத்து பெரிய, சிறிய மருத்துவமனைகளின் விவரங்களை நகர தி.மு.க. செயலாளர்களுக்கு அனுப்பிய ஐ-பேக், அந்த மருத்துவமனைகளை நடத்தும் மருத்துவர்களை நேரில் சந்தித்துப் பேசி அவர்களின் தொடர்பு விவரங்களையும், மறக்காமல் அவர்களுடைய வாட்ஸ்அப் எண்ணையும் கேட்டு அனுப்பச் சொல்லி அதையும் வாங்கி வைத்துக் கொண்டது. இறுதியாக, மாநகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் என கிராமங்கள் ஒன்று விடாமல் இந்தக் தகவல்களைத் திரட்டிய ஐ-பேக் டீம், அவைகளை வைத்து தற்போது தனது திட்டத்தை ஓசைப்படாமல் செயல்படுத்த துவங்கி விட்டது.

அதாவது, இது நாள் வரை கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் மட்டும் ‘ஜூம் ஆப்’ மூலம் வீடியோ கால் பேசி வந்த மு.க.ஸ்டாலின், சில நாட்களாக ‘பிரசாந்த் கிஷோர் அறிவுரைப்படி வாட்ஸ்அப் வீடியோ கால் மூலமாக கிராமத்து முக்கிய பிரமுகர்களிடம் பேசத் துவங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி, கிராமங்களில் உள்ள முக்கிய நபர்கள், முன்னால் ஊராட்சித் தலைவர்கள், எந்த தேர்தலிலும் கலந்து கொள்ளாத ஊர் நாட்டாமைகள், அரசியல்வாடையே அடிக்காத நடு நிலையாளர்கள், ஊருக்காக உழைக்கும் கிராமத்து தலைவர்கள் ஆகியோரின் செல்போன் எண்களைத் தொடர்பு கொள்ளும், பிரசாந்த் கிஷோர் டீம்,  தமிழகத்தின் முன்னால் முதல்வர் கலைஞரின் மகனும், வருங்கால முதல்வருமாகிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தங்களோடு உரையாட விரும்புகிறார் என்று பேசி, அவர்களின் ஆர்வத்திற்கேற்றவாரு லிஸ்ட் தயார் செய்யத் துவங்கி விட்டனர்.

ஒரு சுபயோக சுபதினத்தில், ஏற்கனவே குறிப்பிட்ட அந்த நேரத்தில், நான் மு.க.ஸ்டாலின் பேசுகிறேன் என அவர்களோடு போன் மூலமாக பேச்சை துவங்கும் ஸ்டாலின், “நீங்க, ஊருக்கு நெறைய நல்லது செஞ்சுருக்கீங்க. வாழ்த்துக்கள். வருகிற தேர்தலில் நம்மதான் ஆட்சியமைக்கப் போறோம். நம்ம ஊரு கோயில், குளத்துக்கு நெறைய நல்லது செய்ய வேண்டியிருக்கு. அதையும் உங்கள வெச்சே செஞ்சுடலாம். நீங்க நம்ம ஜனங்க எல்லோர் கிட்டேயும் சொல்லுங்க. வேட்பாளர் அறிவிச்ச பிறகு மறுபடியும் பேசுறேன்” எனக் கூறி முடிக்க, இதனால், “சத்தியமா சொல்றேங்க, நம்ம குடும்பத்து ஓட்டு மட்டுமில்லீங்க, சாதிசனங்க அத்தன பேரு ஓட்டும் நமக்குத்தான் தம்பி” எனக் கூறி மெர்சலாகிறார்கள் நமது பெருசுகள்.

வயதானவர்கள் மட்டுமல்லாமல், சமூக ஆர்வளர்களான இளைஞர்களையும் குறி வைக்கும் அவர்கள், கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சவிருப்பதாகவும் அதற்கும் நல்ல ரிசல்ட் கிடைத்திருப்பதால், தேர்தல் ரிசல்ட்டும் நல்லபடியாகவே இருக்கும் எனவும் நம்புகிறாராம் ஸ்டாலின். இது ஒருபுறமிருக்க, சேலம் மற்றும் தேனி ஆகிய இரு மாவட்டங்களுக்கும் கூடுதலான நபர்களை களமிறக்கி விட்டிருக்கிறதாம் ஐ-பேக் டீம். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மாவட்டமான சேலத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும், துணை முதல்வரின் தேனியில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும், தலா 100 பேர் வீதம் ஆயிரத்தி 500 பேர் களமிறங்கி முக்கியப் பிரமுகர்களின் வாட்ஸ்அப் எண்கள், ஏரியா பிரச்சனைகள் என அத்தனையும் கையில் வைத்துக் கொண்டு, ‘’ஹலோ, நான் ஸ்டாலின் பேசுறேன்’ திட்டத்திற்கு தயாராகி வருகிறார்களாம்.


 நமக்கு கிடைத்த ஒரு ஆடியோவில், ‘தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அலுவலகத்திலிருந்து பேசுகிறேன்... தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உங்களோடு நேரடித் தொடர்பில் இருக்க விரும்புகிறார். உங்களுக்கு விருப்பமா? எனக் கேட்க, சற்றும் யோசிக்காமல், எனக்கு விருப்பம் இல்லை என பட்டென கூறுகிறார் அந்த நடுநிலையாளர். பிரசாந்த் கிஷோரின் அந்த ‘ஐ பேக்’ நிறுவன ஊழியர் ஓரளவு தமிழ் தெரிந்த வடநாட்டவர் என்பது அவர் பேசுவதிலிருந்தே தெரிகிறது.

அதாவது, ‘பிரசாந்த் கிஷோரிடம் எற்கனவே பணியாற்றிய பலர், அந்த நிறுவனத்தை விட்டு நின்று விட்டதாகவும், பிரசாந்த் கிஷோரும் கூட, தி.மு.க. தலைமைக்கு இந்த புதிய அசைன்மென்டை கொடுத்து விட்டு, பீகார் தேர்தலை கவனிப்பதில் அதிக கவனம் செலுத்துவதாகவும், அதனால்தான் இந்த சருக்கல்கள்’ எனவும் ஐ பேக் டீம் மீது சமீப காலமாக அதிருப்தியில் இருக்கிறதாம் தி.மு.க. தலைமை. தவிர, ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என வீரவசனம் பேசும் தி.மு.க.வின் வெற்றி வியூக சக்கரத்திற்குள் குவிந்திருக்கும் வடநாட்டவரின் ஆதிக்கம் தி.மு.க.வினரையே கூட அதிர்ச்சியடைய வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

click me!