
தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடவடிக்கை கை கொடுக்க ஆரம்பித்தது. எனவே தளர்வுகளற்ற முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு மட்டுமல்லாது மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே சரியான தடுப்பு நடவடிக்கையாக கருதப்படுகிறது. எனவே தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் கொரோனா சிகிச்சைக்காக 504 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை திறந்து வைத்த பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழகத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து 83 லட்ச தடுப்பூசிகளும் , நேரடி கொள்முதல் மூலம் 13 லட்சம் என மொத்தம் 96 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளதாகவும், 87 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில் 5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்தார்.
கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் இன்றும் நாளையும் போட்டு முடிக்கபப்டும் என தெரிவித்த அவர், மத்திய அரசு தொகுப்பில் இருந்து தடுப்பூசிகள் வரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றார். 3.5 கோடி தடுப்பூசிகளுக்கான உலகளாவிய டெண்டர் எந்த நிறுவனத்திடம் வழங்கப்படும் என ஜூன் 5 தேதி தெரிய வரும் என்றவர், இதனையடுத்து 6 மாத காலத்திற்குள் தடுப்பூசி வந்தவுடன் அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்படும் என்றும் கூறினார். இதனிடையே தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து தமிழக அரசு இன்று ஆலோசனை நடத்த உள்ளது. அதற்கு முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.