
ஹார்வர்டு பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை அமைய தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய உலகில் உள்ள அனைத்து தமிழ் நெஞ்சங்களும் நிதி உதவி வழங்கி வருகின்றன. தமிழக அரசு சார்பில் பத்து கோடி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்த் திரைப்பட நடிகர்கள் சிலர் நிதி கொடுத்தனர். நடிகர்கள் கமலஹாசன், விஷால் உள்ளிட்டோர் நிதியுதவி அளித்தனர்.
வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைவர் எம்.வி. முத்துராமலிங்கம் தமிழ் இருக்கை நன்கொடையாக 25 லட்சம் வழங்கியுள்ளார். இதே போன்று ஏராளமானோர் நிதியுதவியை வாங்கி வருகின்றனர்
இந்த நிலையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ் இருக்கை அமைய தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என கூறியுள்ளார்.
இந்த நிதியுதவி தமிழ் மொழியின் மேம்பாட்டுக்காகவும், முதன்மைக்காகவும் போராடி வரும் திமுக தலைவர் கருணாநிதி சார்பில் வழங்கப்படும் என்றும், தமிழுக்கு கிடைக்க போகும் ஹார்வர்டு இருக்கை என்பது ஒவ்வொரு தமிழருக்கும் கிடைக்கும் பெருமிதம் ஆகும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
உயர் நீதிமன்றம், மத்திய அரசின் அலுவலகங்களில் நிச்சயம் ஒரு நாள் தமிழ் அரியணை ஏறியே தீரும் என்றும் தமிழ் இருக்கை விரைவில் அமைந்து தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவ செய்ய வேண்டும் என்றும் மு.க.கஸ்டாலின் தெரிவித்துள்ளார்.