
சென்னை புறவழிச்சாலை அருகே மலையம்பாக்கம் பகுதியில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 69 ரௌடிகளை போலீசார் சுற்றிவளைத்து துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அதே நேரத்தில் 50 ரௌடிகள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
அண்மைக்காலமாக சென்னையில் போலீசார் இரவு ரோந்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்பார்கள் மூலம் கொலை, கொள்ளை அடிக்க ரௌடிகள் போடும் பிளான் குறித்து முன்கூட்டியே அறிந்து அதனை அதிரடி நடவடிக்கைகள் மூலம் தடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையை அடுத்த மலையம்பாக்கத்தில் தலைமறைவான ரவுடிகள் ஒன்றுகூடி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மலையம்பாக்கம் பகுதிக்கு சென்ற 50 க்கும் மேற்பட்ட போலீசார், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் குடித்து, கூத்தடித்துக் கொண்டிருந்த ரௌடிகளை சுற்றி வளைத்தனர்.
போலிசாரைக் கண்டதும் ரௌடிகள் தெறித்து ஓடத் தொடங்கினர். ஆனால் அவர்களை சுற்றி வளைத்தும் , துப்பாக்கி முனையிலும் போலீசார் கைது செய்தனர்.
இந்த ஆப்ரேஷனில் 69 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் 50 க்கும் மேற்பட்ட ரௌடிகள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
கைது செய்யப்பட்ட 69 ரௌடிகளையும் ரகசிய இடத்தில் வைத்து மாங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 8 கார்கள், 38 பைக்குகள் மற்றும் அரிவாள், கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.