ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டது ரொம்ப சந்தோஷமா இருக்காம் !! மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த ராமதாஸ் !!

By Selvanayagam PFirst Published Jan 2, 2020, 6:35 AM IST
Highlights

ரெயில் பயண கட்டண உயர்வு குறைவாக இருப்பது நிம்மதியை தருகிறது என்றும் அதனை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும்  பாமக  ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

ரயில் டிக்கெட் கட்டணத்தை இந்திய ரயில்வே துறை அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதன்படி, புறநகர் அல்லாத பயணிகள் ரயில் கட்டணம் கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்த்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது. குளிர்சாதன வசதி அல்லாத 2ஆம் வகுப்பு அமர்வு, 2ஆம் வகுப்பு ஸ்லீப்பர் கிளாஸ் மற்றும் ஃபர்ஸ்ட் கிளாஸ் ஆகியவற்றுக்குக் கிலோமீட்டருக்கு ஒரு பைசா உயர்த்தப்பட்டுள்ளது. 

மெயில் ,எக்ஸ்பிரஸ் குளிர்சாதன வசதி அல்லாத 2ஆம் வகுப்பு அமர்வு, 2ஆம் வகுப்பு ஸ்லீப்பர் கிளாஸ், ஃபர்ஸ்ட் கிளாஸ் ஆகியவற்றின் டிக்கெட் கட்டணம் கிலோமீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு  ஜனவரி 1 2020  முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் ரயில் டிக்கெட் கட்டண உயர்வு குறைவாக இருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பாமக ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ,அறிக்கையில், “ரயில் கட்டணம் கிலோமீட்டருக்கு 40 பைசா, அதாவது 77% வரை உயர்த்தப்படும் என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், கட்டண உயர்வு மிகவும் குறைவாக இருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே ஒரு வகையான நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது என்பது தான் உண்மை” என்று தெரிவித்தார்.

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ரயில்  கட்டணங்கள் உயர்த்தப்படக்கூடாது என்பது தான் பாமகவின் நோக்கம் ஆகும். பாமகவினர் ரயில்வே இணை அமைச்சர்களாக இருந்த காலங்கள் உள்ளிட்ட 11 ஆண்டுகளில், அதாவது 2002 முதல் 2012 வரையிலான காலத்தில் பயணிகள் கட்டணம் ஒரு பைசா கூட உயர்த்தப்படவில்லை. மாறாக, ஒரு முறை கட்டணம் குறைக்கப்பட்டது என்று ராமதாஸ், சுட்டிக்காட்டியுள்ளார்.

“எனினும், கடந்த 5 ஆண்டுகளாக பயணிகள் கட்டணம் உயர்த்தப்படாதது; ரயில்வே துறையின் இயக்கச் செலவுகள் அதிகரித்திருப்பது ஆகிய காரணங்களாலும், சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயணிக்கும் தொடர்வண்டிகளில் அதிகபட்ச கட்டண உயர்வு ரூ.10 தான் என்பதாலும் அதிக பாதிப்புகள் இல்லாத இக்கட்டண உயர்வை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை” என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

click me!