அண்ணனுடன் சமாதானம்..! பிறந்த நாள் வாழ்த்து..! ஸ்டாலின் – அழகிரி சந்திப்பு.. ஜனவரி 30ந் தேதி அதிசயம்?

By Selva KathirFirst Published Jan 26, 2021, 10:52 AM IST
Highlights

திமுகவில் கடந்த ஏழு வருடங்களாக ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ள தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியுடன் மு.க.ஸ்டாலின் சமாதானம் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுகவில் கடந்த ஏழு வருடங்களாக ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ள தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியுடன் மு.க.ஸ்டாலின் சமாதானம் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுகவில் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக சதி செய்ததாக கடந்த 2016ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து மு.க.அழகிரி விலக்கி வைக்கப்பட்டார். அதன் பிறகு அவரை கட்சியில் திமுக மறுபடியும் சேர்க்கவில்லை. கடந்த 2018ம் ஆண்டு கலைஞர் மறைவைத் தொடர்ந்து மறுபடியும் மு.க.அழகிரியை திமுகவில் இணைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அழகிரியும் திமுகவில் இணைய பிரம்மபகீரதனம் செய்தார். ஆனால் அழகிரி விதித்த நிபந்தனைகளை மு.க.ஸ்டாலின் தரப்பு ஏற்கவில்லை. இதனால் அப்போது அழகிரி மறுபடியும் திமுகவில் இணைய முடியவில்லை. இதனால் ஏற்பட்ட எரிச்சலில் கலைஞர் மறைந்த 30வது நாளில் தனது ஆதரவாளர்களின் பேரணியை அழகிரி நடத்தினார்.

இந்த பேரணியில் லட்சம் பேர் வருவார்கள் என்று அழகிரி அறிவித்த நிலையில் 10ஆயிரம் பேர் கூட வரவில்லை. இதனால் மனம் உடைந்த அழகிரி தானாகவே தீவிர அரசியலில் இருந்து விலகினார். ஸ்டாலின் ரூட் கிளியர் ஆன நிலையில் திமுக தற்போது அவர் வசம் முழுவதுமாக சென்றுவிட்டது. ஆனால் கடந்த டிசம்பர் மாதம் திடீரென மறுபடியும் அரசியல் அரங்கிற்குள் நுழைந்தார் அழகிரி. கடந்த 2016 மற்றும் 2019 தேர்தல்களில் அழகிரி அமைதியாக இருந்த நிலையில் இந்த  சட்டப்பேரவை தேர்தலில் லநிச்சயம் தனது பங்களிப்பு இருக்கும் என்று அறிவித்தார்.

அத்தோடு மதுரையில் தனது ஆதரவாளர்களின் கூட்டத்தையும் அழகிரி கூட்டினார். இந்த முறை அழகிரியே எதிர்பார்க்காத அளவிற்கு அவரது ஆதரவாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். இதனால் உற்சாகமான அழகிரி தேர்தல் களம் காணுவதற்கான வியூகங்களை வகுக்க ஆரம்பித்தார். அத்தோடு தேர்தல் சமயத்தில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று பதில் பிரச்சாரம் செய்ய அவர் முடிவெடுத்ததாக தகவல் வெளியானது. அதோடு ஸ்டாலின் தொடர்புடைய சில ரகசியங்களை போட்டு உடைக்கவும் அழகிரி ரெடியாகிவிட்டதாக தகவல்கள் கசிந்தன.

வெண்ணெய் திரண்டு வரும் சமயத்தில் அழகிரியால் பானை உடைந்துவிடக்கூடாது என்று திமுக மேலிடம் கருதுகிறது. எனவே அழகிரியை சமாதானப்படுத்த நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் சிலர் களம் இறங்கினர். இதற்காகவே காத்திருந்த அழகிரியும் அவர்களை உற்சாகத்துடன் வரவேற்று பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்கிறார்கள். தனக்கு இனி கட்சியில் எந்த பதவியிம் வேண்டாம் என்றும், தனது மகனுக்கு கட்சியில் நல்ல பதவி சட்டப்பேரவை தேர்தலில்போட்டியிட வாய்ப்பு என்று அழகிரி பேச்சுவார்த்தையை ஆரம்பித்ததாக சொல்கிறார்கள். அத்தோடு திமுக அறக்கட்டளையில் தன்னை உறுப்பினராக்க வேண்டும் என்று அழகிரி திட்டவட்டமாக கூறியதாகவும் கூறுகிறார்கள்.

கலைஞர் மறைவைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அழகிரி மகனுக்கு கட்சியில் பதவியை தர ஸ்டாலின் முன்வந்ததாகவும் ஆனால் திமுக அறக்கட்டளையில் அழகிரி இடம் கேட்டதை அப்போது ஸ்டாலின் ஏற்க மறுத்துவிட்டதால் தான் அப்போது அழகிரியுடன் சமாதானம் ஆகவில்லை என்கிறார்கள். ஆனால் இந்த முறை அறக்கட்டளையிலும் அழகிரியை சேர்த்துக் கொள்ள ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டிவிட்டதாக அறிவாலயத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.

இதனை தொடர்ந்து வரும் ஜனவரி 30ந் தேதி பிறந்த நாள் கொண்டாடும் தனது அண்ணன் அழகிரிக்கு ஸ்டாலின் வாழ்த்து கூறுவார் என்றும் அதற்கு அவரிடம் இருந்து வரும் பதிலின் அடிப்படையில் மதுரை சென்று அவரை நேரில் சந்திப்பார் என்றும் இதன் பிறகு அழகிரி மறுபடியும் திமுகவில் இணைந்து செயல்படுவார் என்றும் சொல்லப்படுகிறது. அறிவாலயத்தில் இருந்து இது போன்ற தகவல்கள் கடந்த ஒரு வாரமாகவே கசிந்து வரும் நிலையில், மு.க.அழகிரி தரப்பில் இந்த தகவல்களை மறுக்கவோ அல்லது ஏற்கவோ யாரும் தயாராக இல்லை. அதே சமயம் அழகிரிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் திமுக இப்படி தகவல்களை பரப்புவதாகவும் அண்ணன் தற்போது வரை திமுகவில் மறுபடியும் இணைவது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

click me!