தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 3 குழந்தைகள் ஏரியில் இருந்து சடலமாக மீட்பு.. எப்படி நடந்தது இந்த கொடூரம்.?

By Ezhilarasan BabuFirst Published Jan 26, 2021, 10:28 AM IST
Highlights

அதனால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக கிராமம் மற்றும் வயல் நில பகுதிகளில் குழந்தைகளை தேடியுள்ளனர். எங்கும் தேடியும் குழந்தைகள் கிடைக்காததால், வேப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில், காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில் காவல்துறையினர் விரைந்து வந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

விருத்தாச்சலம் அருகே காணாமல் போன மூன்று குழந்தைகளில், இரண்டு குழந்தைகள் 15 அடி ஆழம் கொண்ட ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு குழந்தையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த இலங்கியனூர்  கிராமத்தை சேர்ந்தவர் ராமு -மணிமேகலை தம்பதியினர். இவர்களுக்கு 3 1/2 வயதில் விக்னேஷ், சர்வேஷ் என்ற  இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மணிமேகலையின் சொந்த ஊரான திருப்பெயரில் உள்ள தனது அப்பா வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகளுடன் வந்துள்ளார். அப்போது மணிமேகலையின் இரண்டு குழந்தைகள் மற்றும் அவரது உறவினரான மணிகண்டன் - மல்லிகா தம்பதியினரின் மகன் விவேகன் ஆகிய மூவரும் தங்களது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளனர். 

அதனால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக கிராமம் மற்றும் வயல் நில பகுதிகளில் குழந்தைகளை தேடியுள்ளனர். எங்கும் தேடியும் குழந்தைகள் கிடைக்காததால், வேப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில், காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில் காவல்துறையினர் விரைந்து வந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அக்கிராமத்தின் அருகே உள்ள ஏரியில் குழந்தைகள் விழுந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தீயணைப்பு துறை வீரர்களுடன், 15 அடி ஆழம் கொண்ட ஏரியில்  தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அதே சமயம் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் மற்றும் சார் ஆட்சியர் பிரவீன் குமார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தேடும்பணியை தீவிரப்படுத்தினர். 

சுமார் 7 மணி நேர தேடுதலுக்கு பின்பு  மணிமேகலையின் இரட்டைக் குழந்தைகளான விக்னேஷ் மற்றும் சர்வேஷ் ஏரியில் இருந்து சடலமாக தீயணைப்புத் துறையினர்  கண்டெடுத்தனர். மேலும் மணிகண்டனின் மகனான விவேகன் கிடைக்காததால், தீயணைப்புத் துறையினர், பொதுமக்களின் உதவியுடன், தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.  பின்னர் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன், சார் ஆட்சியர் பிரவீன் குமார், காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் இறந்துபோன இரட்டை குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர். இதுகுறித்து வேப்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்து போன இரண்டு குழந்தைகளை உடற்கூறு ஆய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மூன்று குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் சடலமாக கண்டெடுக்கப்பட்டதால், மூன்றாவது குழந்தையை தேடும் பணியில், வெகு நேரமாகியும் கிடைக்காததால், மாவட்ட பேரிடர் மீட்பு குழுவினர் படகு மூலம் தேடுவதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் கிராமமே ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளது. 

 

click me!