இந்த விஷயத்தில் கேரளா மாதிரி தமிழகமும் மாறிவிடக் கூடாது.. ரெட் அலர்ட் செய்யும் ஹெச்.ராஜா..!

By Asianet TamilFirst Published Sep 30, 2021, 8:37 AM IST
Highlights

கேரளா போல தமிழகம் இந்து சிறுபான்மை மாநிலமாக மாறிவிடக் கூடாது என்று தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
 

காரைக்குடியில் ஹெச்.ராஜா 65-ஆவது பிறந்த நாளை கொண்டாடிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழ்த் திரைப்படங்களில் இந்து மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் காட்சிகளும் கேலி செய்யும் காட்சிகளும் அதுபோன்ற சம்பவங்களும் நிறைய வருகின்றன. அதுபோன்ற ஒரு நிலையில் சமூக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் பாடம் எடுப்பது போல ருத்ரதாண்டவம் என்ற நல்ல படம் வந்துள்ளது. தமிழகத்தில் சில காலமாகவே சாதாரண சட்டம் ஒழுங்கு பிரச்னையைக்கூட சாதிப் பிரச்னையாக மாற்றி கலவரம் உருவாக்கப்படுகிறது. இதற்கென்றே சில கட்சிகள் இங்கு உள்ளன. அதெல்லாம் இப்படத்தில் வருகிறது.
தமிழகக் காவல் துறையினர் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, ரவுடிகளை கைது செய்கிறார்கள். இதுகுறித்து எந்த சமுதாயமும் விமர்சனம் செய்யவில்லை. ஆனால், திருமாவளவனும் வன்னியரசும் இதை சாதி பிரச்னையாக மாற்றுவது சரியில்லை. சென்னைப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நான் எந்த தவறான வார்த்தையையும் சொல்லவில்லை. அர்த்தம் புரியாமல் யார் மனதாவது புண்படுத்தியிருந்தால் அது வருத்தமான விஷயம். பத்திரிக்கையாளர்கள் எங்காவது தாக்கப்பட்டால் முதலாவதாக கண்டிப்பவன் நானாகத்தான் இருப்பேன்.
கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என்று கூறி வருகிறார்கள். ஆனால், குழந்தைகள் பூங்கா திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. பூங்காக்கள், மால்கள், சினிமா தியேட்டர்கள் என எல்லாம் திறக்கப்பட்ட நிலையில் இந்து கோயில்களை மட்டும் எதற்காக மூட வேண்டும். இது பெரும்பான்மை சமுதாயத்தை இழிவுபடுத்தும் செயல். இதை மக்களும் தண்டிப்பார்கள், மகேசனும் தண்டிப்பார்.  உடனே இந்து கோயில்களை திறக்க வேண்டும். கேரளா போல தமிழகம் இந்து சிறுபான்மை மாநிலமாக மாறிவிடக் கூடாது. இதை 7 ஆண்டுகளாக நான் வெளிப்படையாகச் சொல்லி வருகிறேன்.” என்று ஹெச்.ராஜா  தெரிவித்தார்.

click me!