
சசிகலா குடும்பத்தினரை குறிவைத்து நடந்துவரும் வருமான வரித்துறை சோதனைகளால் ஏற்பட்ட பலன் என்ன என்ற கேள்விக்கு, கல்யாணம் ஆன நாளே குழந்தை எங்கே என்று கேட்கலாமா? என்று பாஜக தேசியச் செயலாளர் எச் .ராஜா பதில் கேள்வி எழுப்பி உள்ளார்.
சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள் என அவருடன் தொடர்புடைய அனைவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் 2 நாட்களாக வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர் அலுவலகம், சென்னை தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் வீடு, இளவரசியின் மகன் விவேக் வீடு, மன்னார்குடியில் உள்ள திவாகரன் வீடு, அவரது பண்ணை வீடு, தினகரனின் பண்ணை வீடு, திவாகரனின் கல்லூரி, அவரது நண்பர்களின் வீடு, சசிகலாவின் வழக்கறிஞர் வீடு, சசிகலா குடும்பத்தினரின் ஆஸ்தான ஜோதிடரின் வீடு என வருமான வரித்துறையினர் சரமாரியாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமான வரித்துறையினரின் சோதனையை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என தினகரன், திவாகரன் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர். மத்திய பாஜக அரசிற்கு எதிராக பேசினாலோ செயல்பட்டாலோ அவர்கள் மீது வருமான வரித்துறையும் சிபிஐயும் ஏவப்படுகிறது என எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டுகின்றன.
எனினும் போலி நிறுவனங்கள் தொடங்கி நஷ்ட கணக்கு காட்டி அதன்மூலம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக வருமான வரித்துறை சார்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதற்குமுன்னதாக சேகர் ரெட்டி, ராமமோகன ராவ், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடு அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையின் முடிவு என்ன? அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பிவருகிறார்.
அதேபோல் அரசியல் விமர்சகரான சுமந்த்.சி.ராமன், இந்த சோதனைகளின் முடிவு என்ன? சோதனைதான் முடிவோ? என தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு, கல்யாணம் ஆன நாளன்றே குழந்தை எங்கே என கேட்கலாமா? என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பதிலளித்துள்ளார்.
இன்னும் சோதனை நடந்தே முடியவில்லை. அதற்குள் முடிவு குறித்து கேட்கலாமா? என்பதைத்தான் கிண்டலாக மேற்கண்டவாறு டுவீட் செய்துள்ளார்.