
வலைதளத்தில் குறிப்பிட்ட காட்சியை மட்டும்தான் பார்த்தேன்; நான் கூறியதை சரியாக பார்த்துவிட்டு பேச வேண்டும்; விஷாலுக்கு ஹெச்.ராஜா விளக்கமளித்துள்ளார்.
மெர்சல் திரைப்படத்தில், டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி வரி, திட்டங்களை விமர்சித்த தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, இணையதளத்தில் மெர்சல் படத்தைப் பார்த்ததாக கூறியிருந்தார்.
இதற்கு, நடிகர் விஷால், ஒரு தேசிய கட்சியின் தேசிய செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொது வெளியில் நான் திருட்டுத்தனமாக இணையதளத்தில் சட்டவிரோதமாக புதிய படத்தை பார்த்தேன் என்று பேட்டி கொடுப்பது மிகவும் வேதனை அளிப்பதாக கூறியிருந்தார்.
மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்து கொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்? இது மிகவும் தவறான முன்னுதாரணம். இது எங்கள் மனதை கடுமையாக பாதித்துள்ளது. தங்களது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதோடு பைரசியை ஒழிக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும் விஷால் கூறியிருந்தார்.
இணையதளத்தில் மெர்சல் திரைப்படம் பார்த்ததாக கூறி, ஹெச்.ராஜா மீது பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில், ஹெச்.ராஜா, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
தான் கூறியதை சரியாக பார்த்துவிட்டு நடிகர் விஷால் பேச வேண்டும் என்றார். சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட காட்சியை மட்டும்தான் பார்த்தேன். அதில் தவறு இல்லை. குறிப்பிட்ட காட்சியை மற்றவர்களுக்கு பகிர்ந்து இருந்தால்கூட தவறு என்று கூறலாம் என்றும் அப்போது ஹெச்.ராஜா விளக்கமளித்தார். ஆனாலும், ஹெச்.ராஜாவை, நடிகர்கள் விஜய் மற்றும் விஷால் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.