தமிழகத்தில் 60 ஆண்டுகால திராவிட இயக்கங்களின் அரசியலை, ரஜினியின் ஆன்மீக அரசியல் மாற்றும் என்றும் ரஜினியின் ஆன்மீக அரசியல் என்ற கருத்து பிரதமர் மோடியின் அரசியலுக்கு நெருக்கமானதாக உள்ளதாகவும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றி அவரது ரசிகர்களால் கடந்த 1996 ஆம் ஆண்டில் இருந்து எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரஜினியின் இந்த அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை கேட்ட அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.
தனது அரசியல், ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும் ரஜினி கூறியிருந்தார். ஆன்மீக அரசியல் என்றால், நேர்மையான தர்மமான அரசியல் என்று அர்த்தம் என்றும் ரஜினி கூறியிருந்தார்.
ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, சோ குறித்து சில கருத்துக்களை கூறியிருந்தார். சோ சார் எனக்கு மீடியாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என பயம்காட்டி வைத்திருந்தார். இப்போது சோ இருந்திருந்தால் எனக்கு 10 யானை பலமாக இருந்திருக்கும் என்றார். சோ ஆத்மா எனக்கு பலமாக இருக்கும் என்றும் ரஜினி பேசியிருந்தார்.
ரஜினியின் அரசியல் பிவேசம் குறித்து, அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும், திரைப்பட துறையினரும், அரசியல் கட்சி தலைவர்களும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினியின் ஆன்மீக அரசியல் பாராட்டுக்குரியது என்று பதிவிட்டிருந்தார். தமிழகம் என்றுமே ஆன்மீக பூமிதான் என்றும், ஆழ்வார்கள் - நாயன்மார்கள் அவதரித்த மண் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, ரஜியின் அரசியல் வருகை குறித்து டுவிட்டரில், வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். ரஜினியின் அரசியல் வருகை 60 ஆண்டுகால திராவிட இயக்கங்களின் அரசியலை மாற்றும் என தெரிவித்துள்ளார். ரஜினியின் ஆன்மீக அரசியல் என்ற கருத்து பிரதமர் மோடியின் அரசியலுக்கு நெருக்கமானதாக உள்ளதாக குருமூர்த்தி பதிவிட்டுள்ளார்.