
ஜனநாயகத்தின் மீதும் வளர்ச்சி மீதும் நம்பிக்கை கொண்ட ரஜினிக்கும் அவரது முயற்சிக்கும் வாழ்த்துக்கள் கூறியுள்ளார் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு.
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றி அவரது ரசிகர்களால் கடந்த 1996 ஆம் ஆண்டில் இருந்து எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரஜினியின் இந்த அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை கேட்ட அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.
இன்று ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, தமிழ்நாட்டு அரசியல் மிகவும் மோசமாகி விட்டது என்றும், தமிழக அரசியலைக் கண்டு மற்ற மாநிலத்தார் சிரிப்பதாகவும் கூறினார். என்னை வாழவைத்த தமிழக மக்களுக்கு ஜனநாயக ரீதியில் நான் நன்மை செய்யாவிட்டால், சாகும்வரை அந்த குற்ற உணர்வு எனக்குள் இருக்கும் என்றும் கூறியிருந்தார். மேலும், தனது அரசியல், ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும் ரஜினி கூறியிருந்தார். ஆன்மீக அரசியல்
என்றால், நேர்மையான தர்மமான அரசியல் என்று அர்த்தம் என்றும் ரஜினி கூறியிருந்தார்.
ரஜினியின் அரசியல் பிவேசம் குறித்து, அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும், திரைப்பட துறையினரும், அரசியல் கட்சி தலைவர்களும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு, ரஜினி எடுத்துள்ள முடிவை வரவேற்கிறேன் என்றும் இதில் இருந்து பின்வாங்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசிலும், 6 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசிலும் நடப்பதை பார்த்துக் கொண்டுத்தான் இருக்கிறேன் என்றார். இந்த மக்கள் விரோத செயல்களை சீர்படுத்த வேண்டும். ஜனநாயகத்தில் நிச்சயமாக சீர்படுத்த முடியும். அந்த நம்பிக்கையோடு ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; கட்சி தொடங்கலாம் என்றார்.
அரசியலில் மாற்றம் வருமா? என்பதெல்லாம் இப்போது சொல்ல முடியாது என்ற குஷ்பு, அது மக்கள் கைகிளில் இருக்கிறது என்றார். மக்களின் வாக்கையும், செல்வாக்கையும் பொறுத்தே மற்ற விஷயங்கள் தெரியவரும் என்றும் குஷ்பு கூறினார்.
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து குஷ்பு, டுவிட்டர் பக்கத்தில், ஜனநாயகத்தின் மீதும் வளர்ச்சி மீதும் நம்பிக்கைக் கொண்ட ரஜினிக்கும் அவரின் முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.