
எம்.ஜி.ஆர். பயணம் வேறு; மற்றவர்கள் பயணம் வேறு என்றும் எம்.ஜி.ஆரை மனதில் கொண்டு அரசியலுக்கு வந்தால் ஏமாற்றமே கிடைக்கும் என்றும் தம்பிதுரை எம்.பி. கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றி அவரது ரசிகர்களால் கடந்த 1996 ஆம் ஆண்டில் இருந்து எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரஜினியின் இந்த அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை கேட்ட அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.
இன்று ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, தமிழ்நாட்டு அரசியல் மிகவும் மோசமாகி விட்டது என்றும், தமிழக அரசியலைக் கண்டு மற்ற மாநிலத்தார் சிரிப்பதாகவும் கூறினார். என்னை வாழவைத்த தமிழக மக்களுக்கு ஜனநாயக ரீதியில் நான் நன்மை செய்யாவிட்டால், சாகும்வரை அந்த குற்ற உணர்வு எனக்குள் இருக்கும் என்றும் கூறியிருந்தார். மேலும், தனது அரசியல், ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும் ரஜினி கூறியிருந்தார். ஆன்மீக அரசியல்
என்றால், நேர்மையான தர்மமான அரசியல் என்று அர்த்தம் என்றும் ரஜினி கூறியிருந்தார்.
ரஜினியின் அரசியல் பிவேசம் குறித்து, அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும், திரைப்பட துறையினரும், அரசியல் கட்சி தலைவர்களும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தம்பிதுரை எம்.பி., எம்.ஜி.ஆர். போல் அரசியலில் வர வேண்டும் என்றால் ஏமாந்து விடுவீர்கள் என்று கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தம்பிதுரை எம்.பி., தமிழன் தமிழ்நாட்டை காக்க வேண்டும் என்றும், எம்.ஜி.ஆர். பயணம் வேறு; மற்றவர்கள் பயணம் வேறு என்று கூறினார்.
எம்.ஜி.ஆரை மனதில் கொண்டு அரசியலுக்கு வந்தால் ஏமாற்றமே கிடைக்கும் என்றும் தம்பிதுரை எம்.பி. கூறியுள்ளார்.