
குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும் 93 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் 101 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில் சிலர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
2 கட்ட தேர்தல்
குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில், முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு, இன்றும் (சனிக்கிழமை), இரண்டாம் கட்டமாக, 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 14-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்படுகிறது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும், எதிர்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஆய்வு
குஜராத் தேர்தலில் போட்டியிடும் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களின் பின்னணியை, ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான அமைப்பு உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆய்வு செய்துள்ளன.
இதில் முதல்கட்டத் தேர்தலில் போட்டியிடும் 923 வேட்பாளர்களில் 137 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.
வேட்பாளர்களின் பின்னணி
இதை தொடர்ந்து இரண்டாம் கட்டத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணியை பற்றியும் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆய்வு செய்து தகவல்களை வெளியிட்டுள்ளன.
அதில் கூறியுள்ளதாவது:-
கொல, பாலியல் பலாத்கார வழக்கு
‘‘குஜராத்தில் இரண்டாம் கட்டத் தேர்தலில் போட்டியிடும் 851 வேட்பாளர்களில் 821 பேரின் வேட்புமனுக்களை ஆய்வு செய்துள்ளோம்.
இவர்களில் 101 பேர் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள். அதிலும் 64 பேர் மீது கொலை, ஆள் கடத்தல், பாலியல் பலாத்காரம் போன்ற மிகமோசமான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பா.ஜனதா, காங்கிரஸ்
இவர்களில் பாஜக வேட்பாளர் மகேஷ் புரியா, காங்கிரஸ் வேட்பாளர் பவேஷ் கத்ரா ஆகியோர் மீது கொலை வழக்குகள் உள்ளன.
வேறு சில வேட்பாளர்கள் மீது கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.