குஜராத் உள்ளாட்சித் தேர்தல்.. அமோக வெற்றி பெற்ற பாஜக.. காங்கிரஸை காலி செய்த ஆம் ஆத்மி.!

By Asianet TamilFirst Published Oct 5, 2021, 9:45 PM IST
Highlights

குஜராத் மாநிலம் காந்திநகர் மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றியை பெற்றது.
 

குஜராத் தலைநகர் காந்திநகர் மாநகராட்சிக்கு கடந்த 3-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 44 இடங்களுக்குக் கடந்த இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி உள்பட பல கட்சிகள் களமிறங்கின. பாஜக, காங்கிரஸ் கட்சி சார்பில் தலா 44  வேட்பாளர்கள் களமிறங்கினர். ஆம் ஆத்மி சார்பில் 40 பேர் களமிறங்கினர். பகுஜன் சமாஜ் கட்சி 14 வார்டுகளிலும், தேசியவாத காங்கிரஸ் இரு இடங்களிலும் போட்டியிட்டன. தேர்தலில் மொத்தம் 56.24 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. 
இந்தத் தேர்தலில் மொத்தம் உள்ள 44 இடங்களில் பாஜக 41 வார்டுகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி ஓரிடத்தில் வென்றது. தேர்தலில் ஆம் ஆத்மி 17 சதவீத வாக்குகளைப் பெற்றது. இதனால், பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறின. காங்கிரஸ் கட்சியின் வாக்குகளையும் ஆம் ஆத்மி பிரித்தது. இதனால் பாஜக பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.
 காந்தி நகர் மாநகராட்சித் தேர்தலோடு சேர்ந்து மேலும் சில நகராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதிலும் பெரும்பாலான நகராட்சியில் பாஜகவே வெற்றி பெற்றது. ஆறுதலாக காங்கிரஸ் கட்சி, பன்வாத் நகராட்சியை பாஜகவிடமிருந்து காங்கிரஸ் பறித்தது. இதேபோல தேவ்பூமி துவாரகாவில் 24 இடங்களில் காங்கிரஸ் 16 இடங்களில் வென்றது. பாஜக 8 இடங்களையே கைப்பற்றியது. குஜராத் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டி டிசம்பரில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த வெற்றியின் மூலம் சட்டப்பேரவைத் தேர்தலை தெம்பாக சந்திக்க பாஜக தயாராகிவருகிறது. 
 

click me!